பதிவு செய்த நாள்
20
ஜூன்
2023
10:06
தொண்டாமுத்தூர்;தியானலிங்கம் மன அமைதியை தருகிறது, என, திருவாவடுதுறை ஆதீனத்தின், 24வது குருமஹா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார். திருவாவடுதுறை ஆதினத்தின், 24வது குரு மஹா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கோவை ஈஷா யோகா மையத்துக்கு, நேற்று முன்தினம் இரவு வந்தார். மடாதிபதிகளை வரவேற்கும் சம்பிரதாய முறைப்படி நூற்றுக்கணக்கானோர் திரண்டு, ஆதினத்துக்கு வரவேற்பு அளித்தனர். அதன்பின், குரு மஹா சன்னிதானம், பார்வையிடுவதற்காக ஆதியோகியில் சிறப்பு திவ்ய தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை, கைலாய வாத்தியங்கள் முழங்க, குரு மஹா சன்னிதானத்தை, ஊர்வலமாக ஆலயங்களுக்கு அழைத்து சென்றனர்.
ஆதினம், தியானலிங்கம், லிங்கபைரவி, நாகசன்னதி ஆகிய இடங்களுக்கு சென்று, தரிசனம் செய்தார். நாட்டு மாடுகளை பராமரிக்கும் ஈஷாவின் கோசாலையை பார்வையிட்டார். அதன்பின், ஈஷா சமஸ்கிருதி குருகுலத்திற்கு சென்று, மாணவர்களின் களரி பயட்டை நேரில் கண்டு களித்ததோடு, மாணவர்களுடன் கலந்துரையாடினார். நூற்றுக்கணக்கான பார்வையாளர்களுக்கு, ஆசி வழங்கினார். குரு மஹா சன்னிதானம் கூறுகையில், இங்குள்ள தியானலிங்கம் மன அமைதியை தருகிறது. தேவார பாடசாலை மற்றும் கோசாலையை, மிக அருமையாக பராமரித்து வருகிறார்கள். இது மிகப்பெரிய புண்ணியம். அதேபோல், பாரம்பரிய சிறு தானிய உணவுகளை கொண்டு, இங்கு அன்னதானம் அளிக்கிறார்கள். இயற்கை விவசாயத்தை கற்றுத்தருவது, மரங்கள் நடும் பணிகளை மேற்கொள்வது போன்ற ஈஷாவின் செயல்கள் பாராட்டுக்குரியவை, என்றார்.