பதிவு செய்த நாள்
21
ஜூன்
2023
10:06
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கோம்பைப்பட்டி முத்தாலம்மன் கோவிலில் 10 ஆண்டுக்கு பின் 7 கிராம மக்கள் ஒன்றிணைந்து திருவிழா நடத்த முடிவு செய்து, பிடி மண் கொடுக்கும் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோபால்பட்டி அருகே உள்ளது கோம்பைபட்டி முத்தாலம்மன் கோவில். இந்தக் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருவிழா நடந்தது. அதன்பின் கடந்த வாரம் கே.அய்யாபட்டி, கோம்பைபட்டி, பாப்பம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கடுக்காபட்டி, சரளப்பட்டி, சின்னக் கோம்பைபட்டி உள்ளிட்ட ஏழு கிராம மக்கள் கூட்டம் போட்டு ஒன்றிணைந்து 15 நாட்கள் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதனை அடுத்து நேற்று சாமி சாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொரு கிராமத்தினராக மேளதாளம் முழங்க அய்யாபட்டியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு மஞ்சள் ஆடை அணிந்து வந்தனர். தொடர்ந்து அனைத்து கிராம மக்களும் ஒன்றிணைந்து அங்கிருந்து சந்தான வர்த்தினி ஆற்றின் அருகே சாமி சிலை செய்ய பிடிமன் எடுத்தனர். தொடர்ந்து இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் வரும் ஜூலை 4 அம்மன் அலங்கார நகை பெட்டி அழைத்து வருதல், சப்பரபவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். ஜூலை 5 குட்டி கழுகு மரம் ஏறுதல், முளைப்பாரி, தீச்சட்டி, மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்துவர். மறுநாள் கழுகு மரம் ஏறி, அம்மன் பூஞ்சோலை செல்லுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை 7 கிராம மக்கள் செய்து வருகின்றனர்.