பதிவு செய்த நாள்
22
ஜூன்
2023
01:06
திருச்செந்துார்: திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக தினமான ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றும், மூலவர் பிரதிஷ்டை தினமான தை மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்றும் என, வருடத்தில் இரண்டு முறை வருஷாபிஷேகம் நடந்து வருகிறது. கும்பாபிஷேக தினமான ஆனி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, வரும் 29ம் தேதி, ஆனி வருஷாபிஷேகம் நடக்கிறது. அன்று கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6:00மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு எடுத்துவரப்படும். அதனை தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் மூலவர் சுப்பிரமணிய சுவாமி விமானத்திற்கு போத்திமார்களாலும், உற்சவர் சண்முகர் விமானத்திற்கு சிவாச்சார்யார்களாலும், வெங்கடாஜலபதி விமானத்திற்கு புனித நீரினால் அபிஷேகம் நடைபெறும். அதனையடுத்து, வள்ளி தெய்வானை விமானத்திற்கு போத்திமார்களால் அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து, மூலவர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற உள்ளது.
சுவாமி, அம்பாள் வீதி உலா: மாலை 4:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனை சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து, அருள்பாலிக்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.