சிவபுரீஸ்வரர் கோவிலில் 29,000 ஓலைச்சுவடிகள், 351 இலக்கிய சுவடிக்கட்டுகள், தங்கம், வெள்ளி ஏடுகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2023 02:06
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவிலில் 29,000 ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில் கோவில்கள் மடங்களின் ஓலைச்சுவடிகளை பராமரித்து பாதுகாத்து நுாலாக்கும் திட்டப்பணி நடந்து வருகிறது; இதில் 12 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் கடந்த ஓராண்டில் 282 கோவில்களில் ஆய்வு செய்து 29 செப்பு பட்டயங்கள் சரியான அளவில் கத்திரிக்கப்படாத 1 லட்சத்து 80,280 சுருணை ஏடுகள் 351 இலக்கிய சுவடிக்கட்டுகள் ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி ஏடுகளை கண்டறிந்துள்ளனர். இத்திட்ட ஆய்வாளர்கள் விஸ்வநாதன் நீலகண்டன் ஆகியோர் கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தனர். அதன் ராஜகோபுரத்தின் இரண்டாம் தளத்தில் புறாக்களின் எச்சத்திற்கு இடையில் சிதைந்த நிலையில் 29,000க்கும் மேற்பட்ட சுருணை ஏடுகள் குவிந்திருப்பதை கண்டறிந்தனர்.
இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தாமரை பாண்டியன் கூறியதாவது: பல ஓலைகள் சிதைந்துள்ளன. அவற்றை பதப்படுத்தி பராமரித்த பின் படியெடுத்து ஆய்வு செய்ய வேண்டும். மேலோட்டமாக ஆய்வு செய்ததில் சுவடிகளில் கோவில் நிலத்தின் குத்தகை விபரங்கள் நில தானங்கள் பூஜை முறைகள் பண்டாரக் குறிப்புகள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கோவிலின் திருப்பணிகளை தேவதாசிகள் மேற்கொண்டுள்ளனர். அவர்களில் கச்சி மருது பாப்பா குட்டி ராமி கருப்பி சின்னி கொழுந்தி மீனாட்சி காமாட்சி முறைச்சி உள்ளிட்டோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களுக்கு கோவிலில் பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டு உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்துக்காகவும் அவர்கள் நடனமாடும் போது மேளக்காரர்களாக வருவோருக்காகவும் நில தானம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலின் வரவு செலவுகளை சிவாயம் தேவஸ்தானம் கவனித்துள்ளது. இக்கோவிலுக்கு அருகில் உள்ள அய்யர்மலைக் கோவிலும் சிவாயம் கோவில் என்றே அழைக்கப்பட்டு உள்ளது. பிரிட்டீஷ் காலத்தில் இந்த கோவிலில் தேவஸ்தானத்தின் வாயிலாக கிணறுகளுக்கு கைப்பிடிச்சுவர் அமைத்தது மின்கம்பங்கள் அமைத்த சமூகப்பணிகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலில் பல்வேறு வழக்குகளுக்கான நீதி விசாரணையும் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -