பதிவு செய்த நாள்
22
ஜூன்
2023
04:06
சென்னை:”ஆண்டு வருமானம், 10 லட்சத்திற்கு மேல், 10 கோடி ரூபாய் வரை உள்ள பிரிவின் கீழ், 316 கோவில்கள் இருந்தன. அவை, 578 கோவிலாக உயர்ந்துள்ளன,” என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு செல்வதற்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணி மற்றும் பெருந்திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
வனம், வருவாய், நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை மற்றும் அறநிலையத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள, திருத்தணி கோவிலில், 68 கோடி ரூபாய் மதிப்பிலான பணி உட்பட, 15 பிரசித்தி பெற்ற கோவில்களில் பெருந்திட்ட பணிகளின் கீழ், 1,361 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் நடந்து வருகின்றன. திருத்தணி கோவிலுக்கு மாற்று மலைப் பாதை அமைப்பதற்கு வனத்துறைக்கு சொந்தமான, 6 ஏக்கர், 20 தனிநபர்களுக்கு சொந்தமான, 6 ஏக்கர், கோவிலுக்கு சொந்தமான, 2.10 ஏக்கர் நிலம் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான அனுமதிகளை பெறுவதற்கு, துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டசபை அறிவிப்பின்படி, 500 இலவச திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜூலை, 7ம் தேதி சென்னையில், 30 திருமணங்களும், மற்ற மண்டலங்களில், 200 திருமணங்களும் நடக்க உள்ளன. ஆண்டு வருமானம், 10 லட்சத்திற்கு மேல், 10 கோடி ரூபாய் வரை உள்ள பிரிவின் கீழ், 316 கோவில்கள் இருந்தன. அவை, 578 கோவில்களாக உயர்ந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.