பதிவு செய்த நாள்
23
ஜூன்
2023
11:06
ஹிந்துக்களின் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது, சாதுர்மாஸ்ய விரதம். சன்னியாசிகள் மட்டுமின்றி, ஒவ்வொருவரும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமாகும். ஆடி மாத பவுர்ணமி முதல், கார்த்திகை மாத பவுர்ணமி வரை, தேவர்களும், பகவான் விஷ்ணுவும் யோக நித்திரையில் இருக்கும் காலம் என்கின்றனர்.எனவே, இந்த காலகட்டத்தில் செய்யும் இறை வழிபாடு மிகவும் பலன் தரக் கூடியது. மேலும், அந்த நான்கு மாதங்கள் மழைக் காலம். அந்த காலத்தில், பல ஜீவராசிகளும் இடம்பெயர்ந்து வாழும்.எனவே, அவற்றுக்கு தொந்தரவு கொடுக்காமல், ரிஷிகள், சன்னியாசிகள், ஆச்சாரியர்கள், ஆஷாட பவுர்ணமி அன்று வியாச பூஜை செய்து, அந்த நாள் முதல், ஒரே இடத்தில் நான்கு மாதங்களுக்குத் தங்கியிருப்பர். சாதுர்மாஸ்ய விரத காலத்தில், செய்யும் பூஜைகள், மந்திர ஜபங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவர். அவை, உலகம் முழுதுக்கும் பன்மடங்கு பலன் தரக்கூடியவை. அதன்படி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சனாதன தர்ம கோட்பாடுகளை பாதுகாப்பதற்கும், வளர்த்தெடுப்பதற்கும், தனது முதல் ஆச்சார்யரான ஆதிசங்கரர் வகுத்த பாதையில் செயலாற்றி வருகிறார். இந்த சனாதன தர்மத்தை பரப்புவதற்கும், காப்பாற்றுவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மனித வாழ்வின் ஆன்மிக கலாசார விஷயங்கள் அறிவியலோடு சேர்த்து வளர்த்தெடுப்பதற்கு வலியுறுத்தி வருகிறார். அண்மைக்காலத்தில், நாட்டின் பாரம்பரியமான கல்வி, மருத்துவம், வேதம் ஆகிய மூன்று இலக்கணங்களைக் கொண்டு ஒரு முழுமையான சமூகமாக மாற்ற முடியும் எனும் நோக்கத்தோடு பல்வேறு விஷயங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, பள்ளிகள், வேதபாடசாலைகள், சிற்ப சாஸ்திர கல்விக் கூடங்கள், கலாசார பயிற்சி வகுப்புகள், கண் மருத்துவமனைகள், ஆயுர்வேத கல்லூரி மருத்துவமனைகள், உலகத்தரம் வாய்ந்த நூலகம், பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஆசார்யார்களின் இந்த அனுஷ்டானம் வரும் ஆனி 19ம் தேதி திங்கள்கிழமை ஆஷாட பூர்ணிமையன்று (ஜூலை 03) வியாச பூஜை உத்திரபிரதேசம், ப்ரயாக்றாஜ் என்னுமிடத்தில் தொடங்கி, தொடர்ந்து 07.07.2023 வெள்ளியன்று வாராணாசி ேக்ஷத்திரத்தில் சதுர்மாஸ்ய சங்கல்பம் செய்து கொண்டு புரட்டாசி 13ம் தேதி வெள்ளிகிழமை பாத்ரபத பூர்ணிமையன்று செப்.,29ம் தேதி விஸ்வரூப யாத்திரையுடன் நிறைவு பெறும். பவித்ரமான இந்த தருணத்தில் கைலாசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீசந்திரமெளலீஸ்வரர் யோகலிங்கத்தின் நித்ய த்ரிகால பூஜையுடன் அத்யயன தினங்களில் காலை ஸ்ரீமத் சங்கர பாஷ்ய பாடமும் நடைபெறுகிறது. மேலும் ஜெயந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் 80வது ஜெயந்தி தின உற்சவம் சிறப்பு பூஜை, ஹோமங்கள், பாராயணங்கள், இசை நிகழ்ச்சியுடன் ஆடி 18 ம்தேதி (ஆக.,03, 2023) அன்று நடைபெறுகிறது. இவ்வைபவங்களில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் ஆசியையும், இறைவனின் அருளையும் பெறலாம்.
வியாச பூஜை: ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நாடு முழுவதும் விஜய யாத்திரையை துவக்கியுள்ளார். இதன்படி உத்தரபிரதேசத்தில் சுவாமிகள், விஜய யாத்திரையின் முக்கிய நிகழ்வான, வியாச பூஜை மற்றும், சதுர்மாஸ்ய விரத பூஜைகளை நடத்துகிறார். வரும், 29 முதல், ஜூலை 5ம் தேதி வரை, பிரயக்ராஜில் தங்கும் சுவாமிகள், பெனிபந்த் ஸ்ரீசங்கர விமான மண்டபத்தில் தங்கி, ஜூலை 3ம் தேதி, வியாச பூஜை நடத்தி, அருளாசி வழங்க உள்ளார். ஜூலை 6ம் தேதி முதல் செப்., 29ம் தேதி வரை, வாரணாசியில் தங்கும் சுவாமிகள், ஹனுமன்கட்டில் உள்ள, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் காசி கிளையில் தங்கி, அருளாசி வழங்குகிறார். விஜய யாத்திரையின் முக்கியத்துவம் பெற்ற வழிபாடாக கருதப்படும், சாதுர்மாஸ்ய விரதம் பூஜைகளை மேற்கொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்க இருக்கிறார்.