பதிவு செய்த நாள்
26
ஜூன்
2023
03:06
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், லிப்ட் அமைக்கும் பணி ஜருராக நடந்து வருகிறது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைமேல் உள்ள இக்கோவிலுக்கு, மலைமேல் உள்ள பார்க்கிங் வரை வாகனங்களில் செல்ல முடியும். பார்க்கிங்கில் இருந்து கோவிலுக்கு செல்ல, படிக்கட்டுகளை ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால், முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் படிக்கட்டில் ஏறுவதற்கு சிரமமாக உள்ளது. இதனால், லிப்ட் அல்லது நகரும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு, மருதமலையில் லிப்ட் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. அதன்பின், பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், லிப்ட் அமைக்கும் திட்டத்தில், சில மாற்றங்கள் செய்து, கடந்த ஏப்ரல் மாதம், 5.20 கோடி ரூபாய் மதிப்பில் லிப்ட் அமைக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் துவக்கி வைத்தார். இந்நிலையில் பணிகள் துவங்கப்பட்டு, ஜரூராக நடந்து வருகிறது. இதுகுறித்து அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில்," மருதமலையில் ராஜ கோபுரத்தின் அருகில் லிப்ட் அமைக்கும் பணி துவங்கப்பட்ட நடந்து வருகிறது. பாறைகள் உள்ளதால், கெமிக்கல் செலுத்தி பாறைகள் வெட்டி எடுக்கப்படுகிறது. பாதுகாப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,"என்றார்.