தளபதியான காலித் பின் வலீத் பல போர்களில் வெற்றி பெற்றவர். உமர் என்பவரின் ஆட்சிக்காலத்தில் இவரது தலைமையில், ரோமர்களுக்கு எதிராக போர் ஒன்று நடைபெற்றது. திடீரென தளபதிப் பொறுப்பில் இருந்து இவரை நீக்கிவிட்டு, அபூஉபைதாஇப்னுல் ஜர்ராஹ் என்பவரை நியமிக்கும்படி அரசிடம் இருந்து ஓலை வந்தது. போர் வெற்றிபெறும் நிலை. இவரோ ஒரு தவறும் செய்யவில்லை. பின் ஏன் நீக்க வேண்டும்? அங்குதான் தலைமைக்கு கட்டுப்படும் பண்பாடு வெளிப்படுகிறது. ஆம். செய்தியறிந்தவர் உடனடியாக தளபதிப் பொறுப்பை விட்டுவிட்டு, பின் வரிசைக்கு வந்து வீரராக போர் புரிந்தார். நேற்றுவரை தளபதி. இன்று போர்வீரர். யாரால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் அவரால் முடிந்தது. இது குறித்து சகவீரர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர், ‘‘நான் போர் புரிந்தது உமருக்காக அல்ல. தர்மத்திற்காக’’ என்றார். இப்படி தர்ம பாதையில் நடந்தால், இறுதிவரை நிம்மதி இருக்கும்.