பகவத் கீதை காட்டும் பாதை எல்லாம் நம் உள்மனதையே தொடுகின்றன. அதில் சில வழிகளுக்குள்ளே முரண்பாடுகள் உண்டு. எனினும் இது வட்டபாதை. இரு எதிர் துருவ பாதைகளும் ஒரே இடத்தில் சேர்கின்றன. கீதை பல நிலைகளில் நமக்கு அறிவுரை தருகிறது. சில இடங்களில் அர்ஜூனன் நிலைக்கு கிருஷ்ணர் இறங்கி வந்து உபதேசம் செய்வார். சில நேரங்களில் அவர் பரமாத்வாக தெரிவார்; அப்படி உயர்ந்து பேசுவார். இந்த இரு நிலைகளிலும் கீதையின் கருத்துக்களை புரிவதில் சிரமம் உண்டு. இதே நிலை தான் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானிகளுக்கும் ஆரம்பத்தில் ‘ஒளியை’ புரிந்து கொள்வதில் இருந்தது. ஆரம்பத்தில் ஒளி என்பது ஒரு அலை என நிரூபிக்கப்பட்டு பின்னர் அது துகள்கள் போல் செயல்படுகிறது என உணரப்பட்டது. இந்த இரு விளக்கங்களும் முரண்பட்டது தானே. எனவே நாம் காணும் ஒளி என்பது அறிவியல்பூர்வமாக வேறுபாடுகளை உள்ளடக்கியதே. இது போன்றதே வாழ்க்கை.
ஒரு கிராமத்திற்கு சென்ற யானை ஒன்றை பார்வையற்ற சிலர் தொட்டு உணர்ந்தார்கள். அவர்கள் யானையின் எந்த பகுதியை தொட்டார்களோ அந்த பகுதியை போன்று தான் யானை இருக்கும் என கற்பனை செய்தார்கள். அதன் தும்பிக்கையை தொட்ட பார்வையற்றவரோ, யானை நீளமானது; அதன் தோல் பகுதி சொரசொரப்பானது என கற்பனை செய்தார். அதன் தந்தங்களை தொட்டவரோ, பாறை போன்ற உடலை உடையது யானை என்றார். அதன் வயிற்றுப்பகுதியை தொட்டவர், இந்த விலங்கு மென்மையானது, பெரிதானது என்றார். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து. ஒரு உண்மை மீதான பல்வேறு கருத்துக்களே இன்று நாம் உலகில் காணும் வேறுபாடுகளுக்கு காரணம். உண்மையில் யானை இதற்கு காரணம் அல்ல; ஆனால் எல்லோரது கருத்திற்கும் யானை காரணமாகிறது. பார்வையற்றவர்களுக்கு யானை புரியாத புதிராக இருப்பது போல, மனிதர்கள் மனநிலையும் உள்ளது. நாம் சக மனிதர்களை, உறவினர்களை நமக்கு அறிந்தவாறு புரிந்து கொண்டுள்ளோம். அரைகுறை புரிதல் நம்மை துன்பத்திற்குள்ளாக்கிறது. அரை குறை அறிவில் இருந்து முழுமையான அறிவை நோக்கி ஒரு பயணமாக நம்மை அழைத்து செல்கிறது கீதை. இந்த பயணத்தில் சில அடிகள் செல்லும் போதே வாழ்வில் மகிழ்ச்சியை நம்மால் உணர முடியும்.