அரேபியாவில் குறைஷி, கைஸ் இனத்தினர் இடையே சண்டை நடந்தது. இச்சண்டைக்கு அபூதாலிப் உடன், நபிகள் நாயகமும் சென்றிருந்தார். ஆனால் சண்டையில் அவர் ஈடுபடவில்லை. முதலில் குறைஷிகளும், பின் கைஸ் இனத்தினரும் வெற்றி பெற்றனர். முடிவில் இரு தரப்பினரும் சமாதானம் செய்து கொண்டனர். இத்தகைய சண்டைகள் அங்கு அடிக்கடி நிகழ்ந்ததால், பல குடும்பம் அழிந்தன. இவை தலைவர்களுக்கு வேதனையை உண்டாக்கின. இனி இதுபோல் நடக்காமல் இருக்க, ஓர் உடன்படிக்கையை உருவாக்கினர். அதில் கீழ்க்காணும் ஐந்து நிபந்தனைகள் முக்கியமாக இருந்தது. 1. தீய நடவடிக்கையை ஒழிப்பது. 2. மக்கள் பயமின்றி வாழுமாறு செய்ய வேண்டும். 3. வழிப்போக்கருக்குத் தேவையான வசதிகளை செய்து தருவது. 4. ஏழைகளுக்கு உதவி செய்வது. 5. துன்புறுத்துபவனைத் தண்டித்து, துன்பப்படுபவருக்குப் பரிகாரம் தேடிக் கொடுக்க வேண்டும்.