பலம் இல்லாதவர்களுக்கெல்லாம் பலம் தருபவராக இருப்பவர் தசரதரின் பிள்ளையான ராமர். இதனை, ‘நிர்பல் கே பல் ராம்’ என்று சொல்வர். அப்படிப்பட்ட ராமர் கூட சீதையைப் பிரிந்தபோது, துக்கத்தில் மூழ்கி விட்டார். அப்போது அவருக்கு பக்க பலமாக இருந்து தைரியமூட்டியவர் ஆஞ்சநேயர் தான். அசோக வனத்தில் இருந்த சீதை, ராமரை விட ஆயிரம் மடங்கு துக்கப்பட்டாள். உயிரையே விட்டுவிடத் துணிந்தாள். அப்போது ராம நாமத்தை ஜெபித்தும், ராமாயண வரலாற்றை பக்தியுடன் எடுத்துச் சொல்லியும் சீதைக்குப் புத்துயிர் அளித்தவர் ஆஞ்சநேயர். சீதையின் துன்பத்தைப் போக்கியவர் என்பதால், ‘ஜானகீ சோக நாசநம்’ என்ற பெருமை உண்டானது. இதற்கு ‘சீதையின் துக்கத்தை நீக்கியவர்’ என்று பொருள். சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்து, லட்சுமணனை மூர்ச்சையில் இருந்து காப்பாற்றியதும் ஆஞ்சநேயரே.‘எப்போதும் நான் அனுமனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். நன்றி சொல்ல வார்த்தையே என்னிடம் இல்லை’ என ராமபிரான் சீதையிடம் அடிக்கடி சொல்வதுண்டு.