பதிவு செய்த நாள்
01
அக்
2012
03:10
ஒருசமயம், கிருஷ்ணர் மதுராபுரி நகருக்கு வந்தார். நகரைச் சுற்றிப் பார்க்கச் சென்ற போது, கூன் விழுந்த இளம்பெண் ஒருத்தி, கம்சனுக்கு சந்தனம் எடுத்துச் செல்வதைக் கண்டார். கிருஷ்ணர் அவளை மறித்து, கம்சனுக்கு மட்டும் தான் சந்தனம் பூசுவாயா! எனக்கும் பூசி விடேன், என்றார். அவளும் மறுக்காமல் அவருக்கு பூசி விட்டாள். அந்த கைங்கரியத்துக்காக, கிருஷ்ணரின் அருளால் அவளுடைய முதுகு நேரானது. கிருஷ்ணரின் அருள் பெற்ற அப்பெண்ணே பின்னொரு பிறவியில், பக்த ஜனாபாயாகப் பிறந்து பாண்டுரங்கனின் பரமபக்தையாக வாழ்ந்தாள். சிறுமியாய் இருந்தபோது, ஜனாபாய் பெற்றோருடன் பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோயிலுக்கு சென்றாள். நாமசங்கீர்த்தன ஒலி விண்ணைப் பிளந்து கொண்டிருந்தது. அவளது மனம் கிருஷ்ணபக்தியில் லயித்தது. பெற்றோருடன் வந்ததையே மறந்து, கோயிலில் நிரந்தரமாகத் தங்கி விட்டாள். அங்கிருந்த, நாமதேவர் என்னும் பக்தர், ஜனாவைத் தன் மகளாக ஏற்று, வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பீமாநதியில் நீராடி, தினமும் பாண்டுரங்கனைத் தரிசிப்பது அவளது அன்றாடக் கடமையானது. அவள் மிக நன்றாகப் பாடுவாள். அவளது கீர்த்தனைகளைக் கேட்பவர்களின் மனம் மட்டுமல்ல... எலும்பும் சதையும் கூட உருகிப்போகும்.
அந்தளவுக்கு அவளது குரல் பக்திக்கு மெருகு சேர்த்தது. பாடுவது மட்டுமல்ல! அவளே பாடல்களையும் எழுதுவாள். நாமதேவர் நடத்தும் உபன்யாசங்களில் அவரோடு பாடத் தொடங்கினாள். காலம் விரைந்தோடியது. ஜனாபாய் பருவம் எய்தினாள். வீட்டு வேலைகளையும் அவளே செய்வாள். காலையில் வீடு மெழுகுவதில் இருந்து இரவு சமையல் வரை இழுத்துப் போட்டு பார்ப்பாள். வேலையில் ஈடுபட்டாலும், மனம் மட்டும் பாண்டுரங்கனை சுற்றிக் கொண்டிருந்தது. ஜனாபாயின் பெருமையை ஊரறியச் செய்ய பாண்டுரங்கன் திருவுள்ளம் கொண்டார். ஒருநாள், நாமதேவரின் தாயார் குணாபாய், ஜனாபாயிடம் கோதுமை மாவரைக்கும்படி சொன்னாள். அவளும், பாண்டுரங்கனின் நாமத்தை ஜெபித்துக் கொண்டே அந்த வேலையைச் செய்தாள். பாண்டுரங்கன் ஒரு சிறுவனைப் போல வேடமிட்டு அங்கு வந்தார். என் பெயர் விட்டோபோ. கோயிலில் உன்னைப் பார்த்திருக்கிறேன். நீ பாடும் கீர்த்தனைகளை விரும்பி ரசிப்பேன். இப்போது உனக்காக நான் மாவரைக்கிறேன். பதிலுக்கு நீ பாடினால் மட்டும்போதும், என்றான். ஜனாபாயின் உள்ளம் பூரித்தது. விட்டலனின் பெருமையை இனிமையாகப் பாடத் தொடங்கினாள். சக்ராயுதம் சுழற்றுகின்ற கையால், திருகு கல்லைச் சுழற்றியபடி பாடலை ரசித்தான் பாண்டுரங்கன். வேலை செய்யாமல் பாட்டு பாடும் ஜனாபாயின் செயலைக் கண்ட குணாபாய்க்கு கோபம் வந்தது. அடிப்பதற்காக குச்சியை எடுத்தாள். ஆனால், குச்சி அவளை அறியாமலே நழுவி விழுந்தது. பயந்து போன குணாபாய் கூச்சலிட்டாள். குரல் கேட்டு, நாமதேவர் வீட்டுக்குள் இருந்து ஓடிவந்தார்.
வந்திருக்கும் சிறுவனைக் கண்டதும், அவருக்கு பக்தி பரவசம் உண்டானது. அதற்குள் சிறுவன் மாயமாக மறைந்து விட்டான். வந்திருந்த சிறுவன் பாண்டுரங்கன் என்பதை உணர்ந்த நாமதேவர் கண்ணீர் சிந்தினார். குணாபாயும், ஜனாவின் உன்னத பக்தியை உணர்ந்து அவளை அடிக்க வந்ததற்காக வருத்தம் தெரிவித்தாள். பாண்டுரங்கன் தன்னுடைய அடுத்த திருவிளையாடலைத் தொடங்கினார். தன்னுடைய நவரத்னமாலையை ஜனாபாயின் வீட்டில் இருக்கும்படி செய்து விட்டார். கோயில் நகை காணாமல் போனதை அறிந்த அர்ச்சகர்கள், மன்னரிடம் புகார் செய்தனர். மன்னன், திருடியவனை விரைவில் பிடிப்பதோடு, கழுவில் ஏற்றிக் கொல்லவும் உத்தர விட்டான். அரண்மனைக் காவலர்கள் கோயிலுக்கு வரும் பக்தரான நாமதேவரின் வீட்டிலும் சோதனை நடத்தினர். ஜனாபாயின் அறையில் நவரத்னமாலை இருப்பதைக் கண்டனர். கோயிலுக்கு அன்றாடம் வரும் ஜனாபாய் தான் திருடி இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஜனாபாயைக் கழுவில் ஏற்ற காவலர்கள் அவளை இழுத்து வந்தனர். ஆனால், கொலைக்களத்தில் இருந்த கழுமரம் தீப்பற்றி எரிந்தது. பரமபக்தையான ஜனாபாயின் பக்தியை உலகிற்கு தெரிவிக்கவே இத்திருவிளையாடலை நடத்தினோம் என்று வானில் அசரீரி ஒலித்தது. அவள் தன் வாழ்நாளை பாண்டுரங்கனின் சேவைக்காக மட்டுமே அர்ப்பணித்தாள். பல கீர்த்தனைகளைப் பாடிய அந்த இசைப்பூ இறைவன் திருவடியை அடைந்தது.