அவிநாசி: திருமுருகன் பூண்டியில் உள்ள திருமுருகநாதர் சுவாமி கோவில் மற்றும் சேவூர் வாலீஸ்வரர் கோவிலில், ஆடல்வல்லானுக்கு 16 திரவியங்களில் அபிஷேக ஆராதனையுடன் ஆனி திருமஞ்சன விழா.நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.
அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள முயங்கு பூன்முலை வள்ளி உடனமர் திருமுருகநாதர் சுவாமி கோவில் மற்றும் சேவூரில் உள்ள அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவிலிலும் ஆனி திருமஞ்சன நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் ஆடல்வல்லானான நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமி அம்மையாருக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் செய்து ஆனி திருமஞ்சன விழாவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து,நேற்று ஆனி திருமஞ்சன விழாவில், சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமானுக்கு,16 வகையான திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. விழாவில், திருவாசகப் பாடல்களை சிவனடியார்கள் பாராயணம் செய்ய,மங்கள வாத்தியங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, நடராஜருக்கும்,சிவகாமி அம்மையாருக்கும் பல்வேறு மலர் மாலைகளால் சிறப்பு அணிகாரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றது. ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.