பதிவு செய்த நாள்
28
ஜூன்
2023
03:06
கீழடி: கீழடி அருகே கொந்தகை மந்தையம்மன் கோயிலில் மழை வேண்டி பெண்கள் கும்மி கொட்டியும், பக்தர்கள் உருண்டு கொடுத்தும் வேண்டுதல் நடத்தினர். கிராமங்களில் மழை வேண்டி முளைப்பாரி, குதிரை எடுப்பு உள்ளிட்ட திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம், கொந்தகை கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் மந்தையம்மன் கோயிலில் மூன்று நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும், இதற்காக கிராம மக்கள் ஒரு வாரத்திற்கு முன் அம்மன் கோயிலில் காப்பு கட்டி விரதமிருக்கின்றனர்.
திருவிழா நாளன்று பெண்கள் கோயில் வாசலில் அம்மனை வேண்டி அம்மன் பாடல்களை கும்மி கொட்டியவாறு பாடி வலம் வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் இரண்டு இரண்டு பிரிவாக பிரிந்து ஒரு மணி நேரம் இடைவிடாமல் தொடர்ச்சியாக கும்மி கொட்டி பாடுகின்றனர். அதன்பின் அம்மனை வேண்டி நேர்த்திகடன் விரதமிருந்தவர்கள் குளித்து விட்டு ஈரஉடையுடன் கோயில் வாசல் வரை உருண்டு வந்து சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். . குழந்தை வரம் வேண்டியும், திருமண வரன் வேண்டியும், உடல் நலன் பெற வேண்டியும் நேர்த்தி கடன் இருந்த பக்தர்கள் கேட்ட வரம் கிடைத்த உடன் ஆனி திருவிழாவின் போது உருண்டு கொடுத்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். பின் கோயில் வாசலின் இருபுறமும் நீண்ட வரிசையில் அமர்ந்து மழை வேண்டி மாவிளக்கு எரிய விட்டு பூஜை நடத்துகின்றனர்.
கிராமமக்கள் கூறுகையில்: ஆடி மாதம் விதைப்பு பணிகள் நடைபெறும் அதற்கு முன்னதாக மழை பெய்தால் உழவு பணிக்கு வசதியாக இருக்கும் எனவே ஆனி மாதம் அம்மனுக்கு மழை வேண்டி மூன்று நாட்கள் திருவிழா நடத்துவோம், பெண்கள் கும்மி கொட்டி பாட்டு பாடினால் அம்மன் மனமிரங்கி மழை பெய்ய வைப்பாள் என்பது நம்பிக்கை, என்றனர். திருவிழாவிற்கு என கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருந்து ஜாதி வித்தியாசமின்றி அனைவரும் பங்கு தொகை வழங்குகின்றனர். மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.