பதிவு செய்த நாள்
03
அக்
2012
10:10
காஞ்சிபுரம் : விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட, அய்யங்கார்குளம், அழகிய சஞ்சீவிராயர் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். அவற்றை மீட்டு, வரலாற்று புகழ் மிக்க நடவாவி கிணறை பராமரித்து, அங்கு, வழக்கமான விழா தொடர, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரியுள்ளனர்.
ஆஞ்சனேயர் கோவில்: காஞ்சிபுரத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது அய்யங்கார்குளம். இங்கு, ஆஞ்சனேயர் சுவாமியை மூலவராக கொண்ட, அழகிய சஞ்சீவிராயர் சுவாமி கோவில் உள்ளது. நான்கு புறங்களிலும் உயர்ந்த மண்டபங்கள், ராஜகோபுரம், 50 தூண்கள் கொண்ட மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை மற்றும் பிரகாரங்களை, இந்த கோவில் கொண்டுள்ளது. கோவிலின் பின்புறத்தில் 131 ஏக்கர் பரப்பளவில் தாதசமுத்திரம் என்னும் பிரமாண்ட குளம் உள்ளது. குளத்தின் வடப்பகுதியில், அழகிய வேலைப்பாடுள்ள தாழ்வாரங்களுடன் 16 கால் மண்டபம் உள்ளது. அருகே, நீர் வற்றாத நடவாவி கிணறு உள்ளது. இந்த கிணற்றை சுற்றி ஐந்து ஏக்கர் நிலமும் உள்ளது. இது சஞ்சீவிராயர் கோவிலுக்கு சொந்தமானது.ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நடவாவி கிணறில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் திருமஞ்சனம் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பர். இந்த கோவில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
ஆக்கிரமிப்பு: அழகிய வேலைப்பாடுகளுடன், கருங்கல்லால் கட்டப்பட்ட நடவாவி கிணறு, பல நூற்றாண்டுகளை கடந்துவிட்டது. வெயிலும், மழையையும் இந்த வரலாற்று சின்னத்தில் விரிசலை ஏற்படுத்தி வருகின்றன. வேம்பு, நுனா என, பல்வகை செடிகள் முளைத்து, கட்டடத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. வேர்கள் பரவினால், கட்டடம் முழுமையாக சரியும். பராமரிப்பு குறை போதாதென, கிணற்றிற்கு அருகில் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலம், வருவாய்துறை பதிவேடுகளில், சஞ்சீவிராயர் கோவிலின் பெயரில் தான் இருந்து வந்தது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது, "இரண்டு ஏக்கர் நிலம் தான் கோவிலுக்கு சொந்தம்; மீதமுள்ள மூன்று ஏக்கர் நிலத்திற்கு பட்டா வைத்துள்ளோம் என, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வேலி அமைக்கும் பணி நிறுத்தப் பட்டது. வேலி அமைக்க வைக்கப்பட்டிருந்த கல் கம்பங்களை, இரவோடு இரவாக சிலர் உடைத்தெறிந்தனர். அதற்கு பின் அதிகாரிகள், நிலத்தை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
ஆதாரம் உள்ளது: தாதசமுத்திரமும், நடவாவி கிணறு மற்றும் அதன் அருகே உள்ள நிலம் அனைத்தும், சஞ்சீவிராயர் கோவிலுக்கு சொந்தமானது என்பதை, ஆங்கிலேயர்களால், 1917ல் ஆண்டில் வரையப்பட்ட வரைபடம் ஒன்று உறுதி செய்கிறது. இதில், தாதசமுத்திரம் 131 ஏக்கரும், தாதசமுத்திரத்தில் இருந்து நடவாவி கிணற்றுக்கு வரும் நடைபாதை, மற்றும் கிணற்றை சுற்றி ஐந்து ஏக்கர் நிலம் இருப்பதை வரைபடம் சுட்டிக் காட்டுகிறது.தற்போது, சஞ்சீவிராயர் கோவில் பெயரில் இருந்து 136 ஏக்கர் நிலத்தில், பெரும்பாலான நிலம் தனியார் பெயருக்கு பட்டா மாற்றப் பட்டு உள்ளது. இது எப்படி நடந்தது; யார் யார் இதன் பின்னணியில் உள்ளனர்; எந்த ஆண்டில் இந்த மோசடி நடந்தது; இப்படி பல கேள்விகளை பக்தர்கள் கேட்கின்றனர். பதில் சொல்ல வேண்டியது இந்து சமய அறநிலைய துறையும், வருவாய் துறையும் தான். இது குறித்து, பக்தர் ஒருவர் கூறும்போது, "கோவில் நிலத்தை கொள்ளையடித்தவர்களை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து நிலங்களை மீட்க வேண்டும். இல்லாவிட்டால், வரலாற்று சின்னமாக இருக்கும் நடவாவி கிணற்றையும் கூறு போட்டு விற்றுவிடுவார்கள். பழைய கோப்புகளை தூசுதட்டி எடுத்து ஆய்வு செய்தால், குற்றவாளிகள் சிக்குவார்கள் என்றார்.