பதிவு செய்த நாள்
28
ஜூன்
2023
05:06
சூலூர்: கோவையின் நொய்யல் நதி, மீண்டும் ஜீவ நதியாக மாற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்," என, அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், நொய்யல் ஆறு டிரஸ்ட் சார்பில், நொய்யல் பெரு விழா கடந்த, 23 ம்தேதி துவங்கியது. நொய்யல் நதி பாயும் வழிகளில் உள்ள ஊர்களில் பொதுமக்கள், நொய்யல் நதி பாதுகாப்பு ரதத்துக்கு வரவேற்பு அளித்தனர். நேற்று சூலூர் வட்டாரத்துக்கு உட்பட்ட பட்டணம், இருகூர் பகுதியில் நொய்யல் நதி பாதுகாப்பு ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று பாப்பம்பட்டி பிரிவு, ராவத்தூர் நொய்யல் ஆற்றுப்பாலத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சந்நியாசிகள் நொய்யல் நதிக்கு மலர்கள் தூவி, கற்பூர ஆரத்தி காட்டினர். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து, ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லூரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சந்நியாசிகள் பேசியதாவது: தென் கயிலாய கங்கை, காஞ்சி மாநதி என அழைக்கப்பட்டது நொய்யல் நதி. கொங்கு மண்டலத்துக்கு வளம் சேர்த்த அந்த நதியில் தற்போது, கழிவு நீர் தான் ஓடுகிறது. நதியை மீட்டெடுக்க நொய்யல் ஆறு டிரஸ்ட் துவக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். நொய்யல் நதி மீண்டும் ஜீவ நதியாக மாற, அனைத்து பகுதி மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் பேசினர்.