மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வைபவம் நடைபெற்றது. வைணவ திருத்தலங்களில், சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். நேற்று இக்கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து சக்கரத்தாழ்வார் உச்சமூர்த்திக்கு திருமஞ்சனம் முடிந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு உபநிஷத் வேத பாராயணம் மற்றும் சாற்று முறை சேவிக்கப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை, பிரசாத விநியோகம் நடந்தது. இந்த வைபத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், மிராசுதர்கள், கோவில் ஊழியர்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.