நமஸ்காரம் (வணங்குதல்) செய்வதைத் ‘தண்டம் சமர்ப்பித்தல்’ என்பர். தண்டம் என்றால் கழி அல்லது கோல் என்று அர்த்தம். நமது சரீரத்தை (உடல்) முழுவதுமாக தரையில் படும்படி கடவுளை வணங்குவதற்கு பெயரே இது.
கையில் பிடித்திருக்கிற ஒரு கோலை விட்டுவிட்டால், அது அப்படியே விழும். அதுபோலவே நம் சரீரமும் வெறும் மரக்கோல்தான். இதைத் துாக்கிப்பிடித்து நிறுத்தி ஆட்டி வைக்கிற சக்தி கடவுள் கொடுத்தது. ஆனால் சிலரிடம் இந்த உடலை நாம்தான் இயக்குகிறோம் என்ற அகங்கார எண்ணம் உள்ளது. இது தவறான விஷயம். இந்த எண்ணத்தை கைவிட வேண்டும். இதற்கு அடையாளமாக கடவுள் முன் சரீரத்தை முழுவதுமாக கீழே வைக்க வேண்டும். அதிலும் ‘நாம் செய்கிறோம்’ என்ற எண்ணம் போய்விட்டால், அதுவே ‘ஸதாகால நமஸ்காரம்’. அந்த அனுபவம் நமக்கு இல்லாவிட்டாலும், கடவுளின் சன்னதியிலாவது அப்படி பாவித்து வணங்கி தரையோடு தரையாக எளிமையாக கிடக்க வேண்டும். ‘பொறுப்பை முழுவதும் உன்னிடமே ஒப்படைத்துவிட்டேன்’ என்பதற்கு அடையாளம் இது. அதைவிட்டு கொஞ்சம் பொறுப்பை நமக்கு என்று வைத்துக் கொண்டால்கூட, கடவுளும் தன் பங்கைக் குறைத்துக்கொள்வார். எனவே சகல பொறுப்பையும் அவரிடம் விட்டுவிடுங்கள். இப்படி செய்தால் நமது பாரத்தை அவரே ஏற்று அருள்புரிவார்.