முருகன் தமிழ்மொழிக்கே உரிய கடவுள் என பலர் நினைக்கின்றனர். ஆனால் அது சரியல்ல. வேதம், ராமாயணம், புராணம், காளிதாஸரின் காலம் என எல்லாவற்றிலுமே பாரத தேசம் முழுக்க அவரது பெருமை பரவி இருந்தது. * ரிக்வேதத்தில் தகப்பன் சுவாமியான முருகனை பற்றி கொண்டாடும் செய்தி உள்ளது. சிவபெருமானை போற்றும் இந்த வேத ஸூக்தத்தில் ஒரு மந்திரம் ‘குமாரனை வணங்குகிற பிதா’ என்கிறது. * முருகனின் வரலாற்றை கூறுவது ஸ்காந்த புராணம். ஒன்றரை லட்சம் ஸ்லோகம் கொண்ட இது புராணங்களில் பெரியது. * வால்மீகி ராமாயணம், காளிதாஸரின் குமார ஸம்பவம் முருகனின் பெருமையைச் சொல்கின்றன. * வட இந்தியாவை ஆட்சி செய்த அரசர்கள் முருகனின் பெயரை சூட்டிக்கொண்டனர். உதாரணமாக ‘குமாரகுப்தன்’ என்ற குப்த அரசரை குறிப்பிடலாம். அதிலும் பல ராஜ வம்சங்கள் ‘ப்ரம்மணிய குமாரர்’ என்று முருகனை குலதெய்வமாக வணங்கியுள்ளனர். அவர்கள் தங்களை ‘ப்ரம்மண்யர்’கள் என்றே சொல்வர். ‘ஸுப்ரம்மண்ய’த்தின் முதல் எழுத்தை எடுத்தால் ‘ப்ரம்மண்யம்’ வரும். * வட இந்தியாவின் கண்டெடுக்கப்பட்ட பழங்கால நாணயத்தில் மயூர வாகனராக (மயில் வாகனர்) முருகன் உள்ளார். * தமிழகத்தை முன்பு ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். அவர்களில் முருகன் மீது ஈடுபாடு கொண்டவர்கள், தங்களை ‘பரம ப்ராம்மண்யர்’ எனக் கூறிக்கொண்டனர். * திருப்பரங்குன்றத்தில் இருக்கும் முருகனை யாகம் செய்கிற வேதியர்கள் (அந்தணர்கள்) வணங்குகிறார்கள். இதற்கான சான்று சங்க நுாலான திருமுருகாற்றுப்படையில் உள்ளது.