உதவி பெற்றதற்கு நன்றி செலுத்துவது என்பது சிறந்த பண்பு. ஒரு சிறு புல்லைக்கூட படைக்க முடியாத மனிதனுக்கு உணவு, உடை, மற்ற பொருட்கள் எங்கிருந்து கிடைக்கிறது? அனைத்தும் கடவுள்தானே வழங்குகிறார். இவருக்கு நன்றி காட்டுவது நமது கடமை அல்லவா! இதன் அடையாளமாகவே நாம் உண்பதை அவருக்கு நிவேதனம் செய்து, பிறகு சாப்பிடுகிறோம். நாம் ஆடை, ஆபரணங்கள் அணிவதற்கு அருள் செய்யும் அவருக்கு திருவாபரணங்கள், வஸ்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும். எல்லாருமே இவ்விதம் வீட்டில் பூஜை செய்ய இயலாது. எனவே சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் செய்யும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக கோயில்கள் எழுந்தன. ஆதியில் மகரிஷிகள் மந்திரத்தினால், எங்கும் நிறைந்த பரம்பொருளைச் சில விக்கிரகங்களில் தெய்வீக சக்தியை ஏற்றினர். இப்படிப்பட்ட விக்கிரகங்களை கொண்டு கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. வீட்டில் பூஜை செய்பவர்களாக இருந்தாலும் தினமும் கோயிலுக்கு செல்ல வேண்டும். இப்படி செய்தால் கோயில்களில் பூஜைகள் குறைவற நடக்கும். விளக்குகள் எரியும். சுவாமிக்கு நைவேத்தியம் நடக்கும். அவருக்கு வஸ்திரம் அணிவிப்பார்கள். நமக்கு ஆடை, ஆபரணங்கள் தருபவருக்கு நல்ல வஸ்திரம், ஆபரணங்கள் வேண்டும்தானே! இதற்கான முயற்சியில் இறங்குங்கள். மனதில் உள்ள அழுக்கும் போய்விடும். ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’, ‘அரனை மறவேல்’, ‘திருமாலுக்கு அடிமை செய்’ என்றெல்லாம் புண்ணிய மொழிகள் வழங்கியது நம் நாடு. இப்படிப்பட்ட நாட்டில் ஒவ்வோர் ஊரிலும் கோயில்கள் உள்ளன. அதை நல்ல நிலையில் வைத்திருந்து வழிபாடு நடக்கச் செய்வது நம் முதல் கடமையாக இருக்கட்டும்.