பெற்றோரை மதிப்பது என்பது உயர்ந்த பண்பு. ஆனால் சிலரிடம் இது இருப்பதில்லை. ஒவ்வொருவரும் கடந்த காலத்தில் மிட்டாய், ரொட்டி, பலூன் என எதை வாங்கினாலும் அம்மாவிடம்தான் காசுகளை கேட்டிருப்போம். அப்போது அந்த பலுானில் காற்று நிரப்பக் கூட சக்தியில்லாமல், ‘அம்மா... இதை ஊது’ என்று கெஞ்சி இருப்போம். ஆனால் இதுவே பெரியவனாக வளர்ந்துவிட்டால், சிலருக்கு கொம்பு முளைக்கிறது. இவர்களின் கண்களுக்கு பெற்றோர் என்றால் எதுவுமே தெரியாதவர்கள் என நினைக்கிறார்கள். இந்த குணம் உங்களிடம் உள்ளதா? அதை மாற்றுங்கள். பிறர் மதிக்கும்படியாக நாம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளோம் என்றால், பெற்றோர்தான் காரணம். அவர்கள் வெயில், மழை, காற்று என எதையும் பொருட்படுத்தாமல் நமக்காக உழைத்தவர்கள். வயதான காலத்தில் அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை அல்லவா.