நெல்லையப்பர் கோயில் தேர் திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2023 03:07
திருநெல்வேலி: நெல்லையபப்ர் கோயில் தேர் திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது.
நெல்லையப்பர் கோயில் ஆனித் தேர் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது. தினமும் மாலையில் கோயில் கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 2ம் தேதி காலை நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் இரவு 8:35 மணிக்கு நிலையம் வந்தடைந்தது. இதனையடுத்து சப்தாவர்ண பல்லக்கில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலை கோயில் பொற்றாமரை குளத்தில் அஸ்திர தேவர், அஸ்திர தேவிக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
ரத வீதிகளில் போக்குவரத்து : தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 2 வாரங்களாக டவுன் ரத வீதிகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல் டவுன் ரத வீதிகளில் கன ரக வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.