சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் ; கன்னியாகுமரியில் அன்ன பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2023 04:07
நாகர்கோவில்: சுவாமி விவேகானந்தரின் 120–வது நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் அன்னபூஜை நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-தேதி மகா சமாதி அடைந்தார். அவரது 120வது மகா சமாதி அடைந்த தினத்தையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தா சபாகிரகம் அரங்கத்தில் இன்று காலை அன்ன பூஜை நடந்தது. காலை 10 மணிக்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட 21டன் அரிசியை குவித்து வைத்து அதன் மேலே அன்ன பூரணி சிலையை ஆவாகனம் செய்து அன்ன பூஜை நடைபெற்றது. அகில பாரத விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் வரவேற்றார். விவேகானந்த கேந்திர துணைத் தலைவர் அனுமந்த ராவ், பொதுச் செயலாளர் பானுதாஸ் மூத்த ஆயுட்கால ஊழியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆசிரியரை வழங்கினார்கள். தொடர்ந்து மங்கள ஆரத்தி நடத்தப்பட்டது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.