பதிவு செய்த நாள்
05
ஜூலை
2023
12:07
நாமக்கல்: ‘‘ராமர் கட்டிய பாலம் இருக்கிறது என்பதை நான் நிரூபிப்பேன்,’’ என, அனைத்து இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் மணீந்தர் ஜீத் பிட்டா கூறினார்.
அனைத்து இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் மணீந்தர் ஜீத் பிட்டா; இவர், முன்னாள் இந்திய இளைஞர் காங்., தலைவராக இருந்தார். பஞ்சாப் மாநில அரசில் முதல்வர் பியாந்த் சிங் தலைமையிலான அமைச்சரவையில், பொறுப்பு வகித்துள்ளார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு, நேற்று வந்தார். ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. தரிசனம் செய்த மணிந்தர் ஜீத் பிட்டாவுக்கு, நிர்வாகம் சார்பில், மரியாதை செய்து, ஆஞ்சநேயர் படம் நினைவு பரிசாக அளிக்கப்பட்டது.
அப்போது மணீந்தர் ஜீத் பிட்டா கூறியதாவது: அனுமனை தரிசிக்க ராமேஸ்வரம் செல்கிறேன். தற்போது நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டேன். சில அரசியல் கட்சிகள், ‘ராமர் கட்டிய பாலம் இல்லை; அது கற்பனை; அவ்வாறு இருந்திருந்தால், அந்த பாலம் உடைந்து விட்டது’ என, கூறுகின்றனர். ராமர் கட்டிய பாலம் இருக்கிறது என்பதை நான் நிரூபிப்பேன். இந்த உடலில் உயிர் இருக்கிற வரையில், நான் அதை நிரூபித்து விட்டுத்தான் செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.