பதிவு செய்த நாள்
06
ஜூலை
2023
01:07
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், காலையில் நடக்கும் சிறப்பு ஸ்படிக லிங்க தரிசனத்துக்கு, 200 ரூபாய் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதனால், ஏழை பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என, ஹிந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர், வழக்கறிஞர் ராமமூர்த்தி கூறியதாவது: ராமேஸ்வரம் கோவிலில், சிருங்கேரி மடத்திலிருந்து அளிக்கப்பட்ட ஸ்படிக லிங்கம் உள்ளது. காலையில், மூலவருக்கு பூஜை துவங்கும் முன், அர்ச்சகர்கள், ஸ்படிக லிங்கத்துக்கு, தன் சுத்தி பூஜை செய்வர். அந்த சமயத்தில், மூலவரை யாரும் தரிசிக்க முடியாது; இது வெகு காலமாக இருக்கும் நடைமுறை. துவக்கத்தில் தன் சுத்தி பூஜையை, அர்ச்சகர்கள் மட்டும், தங்கள் நலன் மற்றும் மூலவர் நலனுக்காக செய்து வந்தனர். பின், பொதுமக்களையும் தரிசிக்க அனுமதித்தனர். துவக்கத்தில் இலவசமாக இருந்த தரிசனம், பின் கட்டண தரிசனமானது. ஒரு ரூபாயில் துவங்கிய கட்டண தரிசனம் இன்று, 200 ரூபாயை தொட்டுள்ளது. எல்லா இடங்களிலும் இலவச தரிசனத்துக்கு, அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்து வருகிறார். ஆனால், 200 ரூபாய் கட்டணம் என்பது, ஏழைகளுக்கு சிரமமாக உள்ளது. வெகு துாரத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு தரிசனத்துக்காக வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். அவர்களால், கட்டணம் செலுத்தி, ஸ்படிக லிங்க தரிசனம் செய்ய முடியவில்லை. அதனால், கட்டணத்தை ரத்து செய்யக் கேட்டு, ஹிந்து முன்னணி சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. எனவே, முற்றுகை போராட்டம் நடத்த போகிறோம். இவ்வாறு அவர் கூறினார். ராமேஸ்வரம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் கூறியதாவது: ஸ்படிக லிங்க தரிசனத்தை காலை, 5:00 மணிக்கு துவங்கி, 6:00 மணிக்குள் முடித்தாக வேண்டும். அதன்பின் தான், மூலவர் ராமநாத சுவாமிக்கு பூஜை துவங்க வேண்டும். இது கோவில் ஆகமம். ஸ்படிக லிங்க தரிசனத்துக்கு வரும் பக்தர்களைக் கட்டுப்படுத்த, ஏற்படுத்தப்பட்டது தான் கட்டண முறை. அப்படியும், 1,000 பக்தர்களுக்கு மேல் தரிசிக்கின்றனர். இதையே இலவசம் என்று அறிவித்தால், 5,000 பேருக்கு மேல் கூடுவர். அவ்வளவு பேரும் தரிசித்து முடிக்க காலை, 8:00 மணியை கடக்கும். ஆகம விதிப்படி மூலவருக்கு, 6:00 மணிக்கு பூஜை துவங்க வேண்டும். மூலவரை தரிசிக்க, பக்தர்களை அனுமதிக்க வேண்டும். இன்றைக்கும் மூலவரை தரிசிக்க, கட்டணம் வசூலிப்பதில்லை. இலவச தரிசனம் குறித்து, அமைச்சர் சேகர்பாபுவின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -