விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்தடன் வடம் பிடித்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள பூவரசன்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. கல்தூணில் நரசிம்மர் தோன்றி காட்சியளித்த இடத்தில் பல்லவ மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் தென்அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவ திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கடந்த 29ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்கி நடந்து வருகிறது. 1ம் தேதி ஹம்ச வாகனம், சூர்ய பிரபை, 2ம் தேதி கருட சேவையை முன்னிட்டு சாமி ஹனுமந்த வாகனத்தில் புறப்பாடு நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக கோயிலில் சுவாமிகள் சிறப்பு பூஜைகளுக்கு பின் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து கோவிந்தா கோஷத்தடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேர் திருவிழாவில் உற்சவர் வரதராஜ பெருமாள் ,ஸ்ரீதேவி, பூதேவி உடன் சிறப்பாக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உதவி ஆணையர், செயல் அலுவலர், கோவில் அர்ச்சகர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.