பதிவு செய்த நாள்
08
ஜூலை
2023
12:07
பெ.நா.பாளையம்: தியானம் பரமபதத்தை அடைய உதவுகிறது என, சதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் பேசினார். கோவை மாவட்டம், ஆனைகட்டியில் சுவாமி தயானந்தா சரஸ்வதி சுவாமிகள் நிறுவிய ஆர்ஷ வித்யா குருகுலம் ஆசிரமம் உள்ளது. இங்கு ’அமிர்த பிந்து உபநிஷத்’ என்ற தலைப்பில் ஆன்மிக முகாம் நடந்து வருகிறது.
இதில், ஆர்ஷ வித்யா குருகுல ஆசிரமத்தின் முதன்மை ஆச்சார்யா சதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில், ‘ தியானம், பரமபதத்தை அடைய உதவுகிறது. மந்திரங்களை உச்சரிப்பதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. சாஸ்திரங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் சாஸ்திரங்களையும், வேதாந்தங்களையும், ஞானம், விஞ்ஞானம் அறிவு கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும். பிறர் நம்மை விரும்புகிறார்களோ, இல்லையோ, ஆனால், நாம் பிறருக்கு எவ்வகையிலும் துன்பத்தை தரக்கூடாது. உன்னால் பிறருக்கு உண்மையிலேயே எதை செய்ய முடியுமோ, அதை மட்டுமே செய்ய வேண்டும். செய்ய முடியாததை வாக்குறுதியாக தரக்கூடாது. அனைவரும் நம்மை புகழ வேண்டும், போற்ற வேண்டும், வணங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருத்தல் கூடாது. நாம் எப்போதும் நல்ல மனநிலையில் இருக்க இது மிகவும் முக்கியம். நமது நடை, உடை பாவனைகளால் பிறரை கவர வேண்டும் என்ற எண்ணத்துடன் இருத்தல் கூடாது. அடிப்படை சுத்தத்துடன் இருத்தல் போதுமானது. பிறர் கற்றுக் கொள்கிறார்கள் என்பதற்காக அனைத்து சாஸ்திரங்களையும் நாமும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு எது தேவையோ, அதை மட்டும் கற்றுக் கொண்டால் போதுமானது‘ என்றார். ஒரு வார ஆன்மிக முகாம், இன்றுடன் நிறைவு பெறுகிறது.