பதிவு செய்த நாள்
08
ஜூலை
2023
01:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் பல்லாக்கை டிராக்டரில் மூலம் இழுத்து செல்ல உள்ளதால், சீர்பாதம் தாங்கி ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாணம், மாசி சிவராத்திரி திருவிழா விமரிசையாக நடக்கும். இவ்விழா நாளில் சுவாமி, அம்மன் தங்கம், வெள்ளி வாகனம் மற்றும் மரப் பல்லாக்கில் வீதி உலா வருவார்கள். இந்த பல்லாக்கை பல ஆண்டுகளாக சீர்பாதம் தாங்கி ஊழியர்கள் சுமந்து செல்வார்கள். தற்போது 48 ஊழியர்கள் உள்ள சீர்பாதம் தாங்கிகளுக்கு ஓராண்டுக்கு ஊதியம், அரிசி என ரூ. 30 லட்சம் கோயில் நிர்வாகம் வழங்குகிறது. இந்த பாரம்பரிய ஆன்மிக நடைமுறையை தூக்கி வீசும் வகையில், சீர்பாதம் தாங்கி ஊழியர்களை விரட்டியடிக்க சுவாமி, அம்மன் ப்ல்லாக்குகளை சகடையில் (இழுவை வண்டி) வைத்து டிராக்டர் மூலம் இழுத்துச் செல்ல கோயில் நிர்வாகம் முடிவு நன்கொடையாளர்கள் மூலம் ஒரு புதிய டிராக்டர், 8 சகடைகளை வாங்கி உள்ளது. ஆன்மிக மரபுகளை மீறி, சீர்பாதம் தாங்கி ஊழியர்களுக்கு வேட்டு வைக்கும் நோக்கில் பல்லாக்குகளை டிராக்டரில் இழுத்து செல்லும் செயலுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி கூறுகையில் :
பிற மதத்தில் பின்பற்றுவது போல், சுவாமி, அம்மன் பல்லாக்கை டிராக்டரில் இழுத்துச் செல்வது ஆன்மிகம், கலாச்சார சீரழிவு ஆகும். இன்று டிராக்டர், நாளை கோயிலில் குருக்களை நீக்கி சி.டி.,பிளேயரில் மந்திர பூஜை செய்ய தமிழக அரசு உத்தரவிட கூடும். ஆகையால் ஊழியர்களிடம் பேச்சு நடத்தி சமூக தீர்வு காண கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும். இதனை மீறி டிராக்டரில் பல்லாக்கை இழுத்து சென்றால் தடுத்து நிறுத்தி போராடுவோம் என்றார்.