தன் தாய் வினதைக்கு உதவுவதற்காக தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசத்துடன் திரும்பிக் கொண்டிருந்தார். அசுரர்கள் அந்தக் கலசத்தை பறிக்க முயன்ற போது கலசத்தில் இருந்த அமிர்த துளிகள் நெல்லி மரங்கள் சூழந்த இடத்தில் சிந்தின. அதில் இருந்து சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் மூன்றும் தோன்றின. பழையாறை என்னும் அந்த இடத்தில் சிவபூஜை செய்து விட்டு பயணத்தை தொடர்ந்தார் கருடன். இங்குள்ள சுயம்பு லிங்கத்தை சோமநாதர் என்றும், அம்மனை சோமகலாம்பிகை என்றும் அழைக்கின்றனர். ராஜராஜசோழன் திருப்பணி செய்த இத்தலத்தில் தான் சிவனடியாரான அமர்நீதி நாயனார் பிறந்தார். இக்கோயில் கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ., துாரத்தில் உள்ளது.