ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் வீட்டில் ஏதாவது நன்மை நடந்தால், பிள்ளை யோகாம்சத்தோடு பிறந்திருக்கு என்று பெருமை பேசுவதுண்டு. இதுபோல ஆன்மிகத்திலும் ஒரு அம்சம் இருக்கிறது. அன்னப்பறவையைக் குறிக்கும் ஹம்சம் என்ற வடசொல்லே தமிழில் அம்சம் ஆனது. கல்வியறிவை வழங்கும் கலைமகளின் வாகனம் அன்னம். அம்சவல்லி, அம்சவாகினி என்ற சிறப்புப் பெயர் களும் அவளுக்கு உண்டு. பாலையும், நீரையும் கலந்து வைத்தாலும் அன்னம், பாலை பிரித்து எடுத்து உண்ணும் தனித் தன்மை கொண்டது . வாழ்வில் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு தீயவற்றை புறக்கணிக்க வேண்டும் என்பதே அன்ன வாகன தத்துவம். கல்விமான்களை அன்னத்தோடு ஒப்பிடுவர். அவர்கள் நல்லதை மட்டுமே எடுத்துக் கொண்டு தேவையற்றதை ஒதுக்கி விடுவர். இதனால் தான் துறவிகளை பரமஹம்சர் என்று மரியாதையுடன் அழைப்பர். விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ணரின் முழுப் பெயர் ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்னம் போல வாழப்பழகினால் நல்ல அம்சங்கள் வாழ்வில் தென்பட தொடங்கும். இவர் அம்சமான ஆளப்பா என்று ஊரே புகழும்.