பதிவு செய்த நாள்
12
ஜூலை
2023
05:07
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புதிய அறங்காவலர்கள் பொறுப்பேற்று கொண்டனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். துணை கமிஷனர் அந்தஸ்திலான இக்கோவிலுக்கு, கடந்த சில ஆண்டுகளாக அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இக்கோவிலுக்கு, பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களாக ஐந்து பேரை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனையடுத்து, அறங்காவலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்தது. இதில், ஜெயக்குமார் என்பவரை மற்ற நான்கு உறுப்பினர்களும் ஒருமனதாக அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனையடுத்து, ஜெயக்குமார், அறங்காவலர் குழு தலைவராக பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து, அறங்காவலர் குழு உறுப்பினர்களாக மகேஷ் குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், துணை கமிஷனர் ஹர்ஷினி, உதவி கமிஷனர் கருணாநிதி மற்றும் கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.