பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2023 11:07
பெரியகுளம்: கவுமாரியம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா கோலாகலமாக நடந்து வரும் நிலையில் கோயிலை சுற்றி வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ஆயிரம் கண்ணுடையாளாக, பக்தர்களுக்கு சகல வளம் தரும் ஐஸ்வர்யம் அம்மனாக வராகநதி கரையோரம் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்ட இக்கோயிலுக்கு தேனி வீரபாண்டி கவுமாரியம்மனுக்கு அடுத்து, திருவிழா காலங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆனிப் பெருந்திருவிழா ஜூலை 4 ல் சாட்டுதலுடன் கம்பம் நடப்பட்டது. ஜூலை 10 முதல் கொடியேற்றத்துடன் கோலாகலமாக நடந்து வருகிறது. 10 நாட்கள் திருவிழாவில் அம்மன் சிம்மம் ரிஷபம் அன்னபட்சி, மின் ஒளி, பூ பல்லாக்கு, யானை, குதிரை உற்சவ அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது. முக்கிய திருவிழாக்களான ஜூலை 18 மாவிளக்கு உற்சவமும், மறுநாள் ஜூலை 19 அக்கினிசட்டி எடுத்து அம்மனை வழிபடுவர். ஜூலை 25 மறுபூஜை பாலாபிஷேகம் நடக்க உள்ளது. கோயில் வளாகத்தில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் உருண்டு கொடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.
சிரமம்: கோயிலை சுற்றி டூவீலர்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமதிலகம், பூஜாரிகள் முருகன், ராஜசேகர் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.