பதிவு செய்த நாள்
17
ஜூலை
2023
04:07
பாலக்காடு: திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் 53 யானைகளுக்கு உணவளிக்கும் யானையூட்டு திருவிழா விமரிசையாக நடந்தது.
கேரள மாநிலம், திருச்சூர் வடக்கு நாதர் கோவிலில் ஆடி மாதம், யானைகளுக்கு யானையூட்டு (உணவு வழங்குதல்) திருவிழா, சிறப்பாக நடத்தப்படும். நடப்பாண்டுக்கான விழா இன்று நடந்தது. தந்திரி புலியன்னூர் சங்கரன் நம்பூதிரியின் தலைமையில் கணபதி ஹோமம் நடந்தது. 12 ஆயிரம் தேங்காய்கள், 2500 கிலோ வெல்லம், 1500 கிலோ அவல், 250 கிலோ மலர்கள், 150 கிலோ எள், எலுமிச்சை, கரும்பு, 500 கிலோ நெய், 100 கிலோ தேன் பயன்படுத்தப்பட்டன. காலை 7 மணி அளவில் கோவில் தெற்கு கோபுர நடை முன் வரிசையாக அணிவகுத்த பிரபல யானைகளான தெச்சிக்கோட்டு ராமசந்திரன், எர்ணாகுளம் சிவகுமார் உட்பட 53 யானைகளுக்கு கஜ பூஜை நடந்தது. 9.45 மணி அளவில் பத்து வகை பழங்களுடன் 500 கிலோ புழுங்கல் அரிசியில் மூலிகைகள், வெல்லம், மஞ்சள் தூள், நெய், கரும்பு ஆகியவை கலந்த யானையூட்டு நிகழ்ச்சி நடந்தன. திருவம்பாடி லட்சுமி என்ற யானைக்கு உணவு வழங்கி கோவில் மேல்சாந்தி பய்யப்பள்ளி மாதவன் நம்பூதிரி துவக்கி வைத்தார். ஆடி மாதம் முதல் நாளில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.