பதிவு செய்த நாள்
17
ஜூலை
2023
04:07
மேட்டுப்பாளையம்: ஆடி அமாவாசை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள, அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலாகும். இங்கு ஒவ்வொரு மாதம் அமாவாசை நாளில், கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று ஆடி மாதம் முதல் தேதி, அதிலும் அமாவாசை என்பதால், கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். காலை, 5:00 மணிக்கு நடை திறந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, 6:00 மணிக்கு பக்தர்கள் வழிபாட்டிற்கு விடப்பட்டது. காலை முதல் மதியம் ஒரு மணி வரை, பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று அம்மனை வழிபட்டனர். பெரும்பாலான பக்தர்கள் கோவில் அருகே உள்ள, பவானி ஆற்றில் குளித்து வந்த பின், அம்மனை வழிபட்டனர். கோவில் கொடிமரம் முன்பு பக்தர்கள் அம்மனுக்கு மண் விளக்குகள், எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகம் என்பதால் கொடிமரம் முன்பாக உள்ள காலியிடங்கள் முழுவதும் பக்தர்கள் எலுமிச்சம்பழம், மண் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டனர். ஆனால் தீபம் ஏற்றும் பகுதியில் குப்பைகள் நிறைந்து காணப்பட்டதால், பக்தர்கள் தீபம் ஏற்ற இடம் இல்லாமல் அவதிப்பட்டனர்.
இது குறித்து கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா கூறுகையில்," தற்காலிகமாக, 9 பேர் தூய்மை பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் கோவிலை சுற்றி சுத்தம் செய்து வருவதால், முன் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் பொழுது, குப்பைகள் நிறைந்து விடுகிறது. உடனுக்குடன் குப்பைகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்றார்.
இது குறித்து கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி கூறுகையில்," ஆடி குண்டம் திருவிழா மற்றும் ஆடி அமாவாசை முன்னிட்டு தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கோவிலை சுற்றிலும், தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன," என்றார்.