மேல்மலையனுார் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2023 04:07
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்திருந்தனர். வழக்கமாக அமாவசையன்று இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் துவக்கி இரவு 12 மணிக்கு நிறைவு செய்வார்கள். நேற்று இரவு 11 மணியுடன் அமாவாசை நிறைவடைந்தது. எனவே இரவு 10 மணிக்கே ஊஞ்சல் உற்சவத்தை துவங்கினர். அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை அம்மன் வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபடத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு கோவில் பூசாரிகள் மகா தீபாராதனையுடன் தாலாட்டு பாடல்கள் பாடி ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர தீபமேற்றி அம்மனை வழிபட்டனர். இதில் டி.ஐ.ஜி., ஜியா உல் அக், எஸ்.பி., சசாங்சாய், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், திண்டிவனம் சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் செந்தில்குமார் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். ஆடி அமாவாசை என்பதால் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கினர். 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.