பதிவு செய்த நாள்
20
ஜூலை
2023
11:07
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவில், ஆடிகுண்டம் திருவிழா, நேற்று இரவு பூச்சாட்டுடன் துவங்கியது.
கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலாகும். இக்கோவில், 30வது ஆடி குண்டம் திருவிழா, இம்மாதம், 18ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. வருகிற, 25ம் தேதி காலை, 6:00 மணிக்கு குண்டம் இயங்கும் வைபவம் நடைபெற உள்ளது. நேற்று இரவு பூச்சாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்காரம் செய்த அணிக் கூடையுடன், பவானி ஆற்றின் கரையில் உள்ள, விநாயகர் கோவிலில் இருந்து, பூசாரியை அழைத்து வந்தனர். பம்பை, உடுக்கை, நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட மேல இசை முழங்க, அம்மன் பாட்டு பாடி பூசாரி ரகுபதியை, கோவிலுக்கு அழைத்து வந்தனர். அதை தொடர்ந்து கோவிலில் காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது. பூசாரி, அம்மன், சிம்ம வாகனம், உற்சவமூர்த்தி அம்மன், திரிசூலம் ஆகியவற்றிற்கு காப்பு கட்டப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் உதவி பூசாரிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்பு நடந்த பூச்சாட்டும் வைபவத்தில், நெல்லித்துறை கிராம மக்கள் முன்னிலையில் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. அதன் பின்பு அம்மன் பாதத்தில் வைத்திருந்த பூ மற்றும் பொரியை எடுத்து, திருவிழா பூச்சாட்டினர். விழாவில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளன. 21ம் தேதி லட்சார்ச்சனை, 22ல் கிராம சாந்தி, 23 ல் காலை, 10:00 மணிக்கு கொடியேற்றம் நடைபெற உள்ளது. 24ம் தேதி இரவு பொங்கல் வைத்து, குண்டம் திறக்கப்பட உள்ளது. 25ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு அம்மன் அழைப்பும், ஆறு மணிக்கு குண்டம் இறங்குதல் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, பரம்பரை அறங்காவலர் வசந்தா ஆகியோர் செய்து வருகின்றனர்.