சதுரகிரி காட்டுத்தீ முழுமையாக அணைப்பு; மலையடிவாரம் திரும்பிய வனத்துறையினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2023 12:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிடித்த காட்டுத்தீயை முழு அளவில் அணைத்து விட்டு, நேற்று காலை வனத்துறையினர் மலையடிவாரம் திரும்பினர்.
சதுரகிரியில் கடந்த 17 அன்று இரவு 7:00 மணிக்கு சாப்டூர் வனப்பகுதி பீட் 5 என்ற இடத்தில் காட்டுத்தீ பிடித்தது. இதனை அணைக்கும் பணியில் சாப்டூர், வத்திராயிருப்பு வனத்துறையினர் கடந்த இரு நாட்களாக ஈடுபட்டனர். நேற்று முன் தினம் மதியம் 3:00 மணி வரை தீயை அணைத்த நிலையில் காய்ந்து கிடந்த செடி, கொடிகள், சிறு மரத்துண்டுகளில் பற்றிய தீ புகைந்து கொண்டே இருந்தது. இதனையும் நேற்று இரவு 11:00 மணி வரை வனத்துறையினர் போராடி அணைத்து விட்டு நேற்று அதிகாலை மலையடிவாரம் திரும்பினர். கடந்த சில மாதங்களாக பாறைகளில் புற்கள் பெரியளவில் வளர்ந்து, காய்ந்திருந்த நிலையில், மலையில் வீசிய பலத்த காற்றால் காட்டுத்தீ ஏற்பட்டு சுமார் 4 ஹெக்டர் பரப்பளவில் செடி, கொடிகள் எரிந்துள்ளது. இதனால் பெரிய மரங்களுக்கோ, வனவிலங்குகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.