பதிவு செய்த நாள்
21
ஜூலை
2023
10:07
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீப தூபங்கள் காண்பிக்கப்பட்டன. ஏராளமான பெண்கள் அம்மன் முன்பு உள்ள விளக்கேற்றும் மண்டபத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மதுரை, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளிலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோன்று, திருப்புவனம் முத்துமாரியம்மன், லாடனேந்தல் வீரமாகாளியம்மன் கோயில், பாப்பாங்குளம் பூங்காவன முத்துமாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
முன்னேற்பாடுகள் : தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி மாதத்தில் பெண்கள் கூட்டம் அலைமோதும், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும், இன்று ஆடி முதல் வெள்ளி என்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக சவுக்கு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பக்தர்கள் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகளில் சென்று அம்மனை தரிசனம் செய்து நெரிசலின்றி தரிசனம் செய்யலாம், மேலும் திருப்புவனம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பஸ்கள் தவிர மற்ற எந்த வாகனங்களும் கோயில் வரை அனுமதிக்கப்படாது, ஷேர் ஆட்டோக்கள், பயணிகளின் வாகனங்கள் அனைத்தும் மடப்புரம் விலக்கு அருகே நிறுத்தப்பட்டு பக்தர்கள் இறங்கி நடந்து சென்று அம்மனை தரிசனம் செய்து செல்ல வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.