பதிவு செய்த நாள்
24
ஜூலை
2023
05:07
ராஜபாளையம்: ராஜபாளையம் மடத்துப்பட்டி அருகே கொண்டனேரி கண்மாயில் 17ம் நுாற்றாண்டை சேர்ந்த பழமையான கல் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி இதுகுறித்து கூறியதாவது: கண்மாயில் 2 நடுகல் சிலைகளும், ஒரு சதிக்கல்லும் கல் மேடை அமைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கல் சிலைகள் அனைத்தும் கி.பி., 17ம் நுாற்றாண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. மறைந்த இரண்டு வீரர்களுக்கு தனித்தனியே எடுக்கப்பட்ட நடுகல், வீரன் இறந்தவுடன் மனைவியும் சேர்ந்து தீயில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வுக்காக எடுக்கப்பட்ட சதிக்கல்லும் காணப்படுகிறது. முதல் நடுகல் சிலை கூம்பு வடிவில் மாடக்கோயில் போன்று வடிவமைத்து வீரன் நின்ற நிலையில் இடது கையில் ஈட்டியை பிடித்து, வலது கையில் இடுப்பில் உள்ள குறுவாளை கை வளையத்தில் இணைத்துள்ளது போன்றும் காட்டப்பட்டுள்ளது. வீரனின் வலது பக்க தலை கொண்டை அலங்காரம், அவரது உருண்டு திரண்ட கண்களும் முருக்கு மீசையுடனும் பனை ஓலை காதணிகளை அணிந்தவாறும் சிலை உள்ளது. கழுத்தணிகலன்களும், கைகாப்பு, கைபட்டைகளும், இடை ஆடை குஞ்சம் வைத்து மடித்து கட்டப்பட்டுள்ளதும், மூட்டு கவசமும் கால் சிலம்பு அணிந்துள்ளதையும் செதுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நடுக்கல் சிலையின் மேல் பகுதி இரண்டடுக்கு மாட கோபுர அமைப்பு போன்று வடிவமைக்கப்பட்டு கீழே வீரன் ஒருவன் என்ற நிலையில் குத்தீட்டியின் மேல் பகுதியை தனது வலது கை கொண்டும் கீழ் பகுதியை இடது கைகொண்டு பிடித்து தரையில் ஊன்றிய படி சிலை அமைந்துள்ளது. வீரனின் இடது பக்க தலை கொண்டை அலங்காரம், நீண்ட காதணிகள், கழுத்தணிகள், கைக்காப்பு, பூ மாலை அலங்காரம், மார்பில் சன்ன வீரம், இடை ஆடையில் இடுப்பு கச்சம் இணைத்து கட்டப்பட்டு குஞ்சம் தொங்கிய நிலையில் காற் சிலம்புடன் உள்ளது. மூன்றாவதாக சதிக்கல் சிற்பத்தில் வீரனும், மனைவியும் அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மூன்று சிலைகளையும் கருப்பசாமி, கருப்பாயி, சுடலைமாடன் என்ற பெயரில் மக்கள் வழிபட்டு வருகின்றனர். கண்மாய் தண்ணீர் நிரம்பிய போது சிற்பங்கள் நீரில் மூழ்கி இருந்துள்ளது. இவற்றின் மூலம் பல ஆண்டுகளுக்கு முன் வீரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் இங்கு நடந்துள்ளதை அறிய முடிகிறது, என்றார்.