நம் உள்மனதில் அமைதியை ஏற்படுத்துவது பகவத் கீதை. வெளி உலகில் அமைதியை நிலைநாட்ட சட்ட விதிமுறைகள் அமலில் இருக்கிறது. எந்த செயலுக்கும் இரண்டு பக்கம் உண்டு. ஒன்று அதை செயல்படுத்துவதற்கான எண்ணம்; மற்றொன்று செயல்படுத்துவது. உதாரணமாக அறுவை சிகிச்சை மருத்துவர், ஒருவரின் வயிற்றை கத்தியால் கிழிக்கிறார். மறுபுறம் கொலையாளி, ஒருவரின் வயிற்றை கத்தியால் கிழிக்கிறார். கத்தியை வயிற்றில் சொருகும் இரண்டு சம்பவங்களும் ஒன்றே. ஆனால் அதைச் செய்யும் இரு வேறுபட்ட மனிதர்களின் நோக்கமும், எண்ணமும் வேறு. அந்த செயலின் மூலம் மருத்துவர் நோயாளியின் உயிரை காப்பாற்றுகிறார். கொலையாளியோ உயிரை பறிக்கிறார். இரண்டு நிகழ்வுகளிலும் உயிர் போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்த செயலில் ஒருவருக்கு உயிரை காப்பாற்றும் எண்ணமும், மற்றொருவருக்கு உயிரை பறிக்கும் எண்ணமும் இருக்கிறது. நம்மிடையே உள்ள சட்டம், விதிகள் சூழ்நிலைக்குட்பட்டது. ஆனால் கீதை தரும் விதிமுறைகள் நிரந்தரமானவை. விதிமுறைகள் இடத்திற்கு இடம் மாறுபடும். உதாரணமாக இடது புறத்தில் அமர்ந்து வாகனம் ஓட்டுவது சில நாடுகளில் அமலில் உள்ள விதிமுறை. அதுவே சில நாடுகளில் சட்டவிரோதம். கறுப்பும் வெள்ளையுமாக இருக்கிறது சட்டம். ஆனால் பல கண்டறியாத பக்கங்களை கொண்டிருக்கிறது மனித வாழ்க்கை. ஒருவர் வரியை செலுத்துகிறார். அவர் மகிழ்வாகவோ, வருந்தியோ எப்படி வரியை செலுத்துகிறார் என்பதில் சட்டத்திற்கு கவலை இல்லை. வரி செலுத்த வேண்டும் என்பது பொதுவான விதி. ஒரு நாட்டின் வரையறைக்குள் செயல்படுத்தப்படும் வரை சட்டம் மிகவும் வசதியானது. ஒருவர் குற்றம் செய்யும் எண்ணத்தில் இருப்பார் என்றால் அதை சட்டம் முன்கூட்டியே தடுக்காது. ஆனால் கீதையோ குற்ற சிந்தனையே கூடாது என்கிறது; அதனை விட்டொழிக்க வழிகாட்டுகிறது. ஒரு தீய செயலை நம் சிந்தனை நிலையில் விட்டொழிக்க கீதை அறிவுரை சொல்கிறது. மரமான பிறகு அல்ல, செடியாக இருக்கும் போதே அதனை வளைத்து விட வேண்டும். கர்மத்தின் சிந்தனை என்பது நிகழ்காலம்; நம்மால் தீய சிந்தனையை நீக்கி விட முடியும். அதன் செயல்பாடு, விளைவு என்பது எதிர்காலம். அதனை நம்மால் மாற்ற முடியாது; ஏனெனில் அது நம் கட்டுப்பாட்டில் இல்லை. சட்டம் அதனை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தும் வேளையில், அறநெறி இலக்கியங்கள் உன்னதமான நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என நமக்கு அறிவுறுத்துகின்றன. அதே போல தீய நோக்கங்களைத் தாண்டிச் செல்ல உதவுகிறது கீதை. ஒருவரின் நோக்கம் நல்லதோ கெட்டதோ, அதனால் வெற்றியோ தோல்வியோ, அந்த நோக்கத்தை உணர்வதன் மூலம் அனைத்தையும் கடந்து உள்நிலையை அவரால் அடைய முடியும்.