புகழ் பெற்ற கோயில்களில் முதலிடத்திலுள்ளது சங்கரன்கோவில். இக்கோயில் தென்காசி மாவட்டத்தில் அமைந்த பஞ்சபூத தலங்களில் மண் தலத்திற்குரியது. இதன் சிறப்பினை தெரிந்து கொள்வோமா. ஹிந்து மதத்தின் இரண்டு கண்களாக விளங்கும் சமயங்கள் சைவம், வைணவம். சைவத்தில் வழிபடும் கடவுள் சிவபெருமான். வைணவத்தில் வழிபடும் கடவுள் மகாவிஷ்ணு. இவர்கள் இருவரும் ஒருவரே. வெவ்வேறானவர்கள் இல்லை என்பதை எடுத்துக்காட்டும் திருத்தலம் சங்கரன்கோவில். இங்கு சங்கரனும் நாராயணரும் இணைந்த வடிவத்தில் அருள் பாலிக்கும் சன்னதி உள்ளது. கோமதியம்மனுக்கு காண்பித்த சங்கரநாராயணர் வடிவத்தை நாம் தரிசிக்கும் நிகழ்ச்சியே ஆடித்தபசு. அந்நாளில் மாலையில் சங்கரநாராயணராகவும், இரவில் சங்கரலிங்கப் பெருமானாகவும் காட்சி தருவார்.
சங்கரநாராயண வடிவம்
பெயர்: சங்கரர் - நாராயணர் நிறம்: சிவப்பு - நீலம் காதிலுள்ள ஆபரணம் சுந்தரவடம் - கமல குண்டலம் மேற்கையிலுள்ள ஆயுதம் மறி - சங்கு கீழுள்ள கை: அபயகரம் - முத்திரைகரம் மாலை: ருத்திராட்சம் - துளசிமாலை ஆடை: புலித்தோல் - பட்டு பீதாம்பரம்
பிடித்தது: வில்வம் - துளசி
உன்சரிதம் அற்புதம்: மகாகவி பாரதியார் கோமதி மகிமை என்ற தலைப்பில் பாடல்கள் பாடி அம்மனை வழிபாடு செய்துள்ளார். அவரின் வழியை பின்பற்றிய புலவர்களில் ஒருவர் தான் ஆ. ஈஸ்வரமூர்த்தி பிள்ளை. இவரால் அம்மன் மீது இயற்றப்பெற்ற நுால் கோமதி சதரத்ன மாலை. நுாறு பாடல்களை கொண்ட இது சொல்சுவை பொருட்சுவையுடையது. இந்நுாலில் நாத்திகர்களின் போலித்தனங்களை தோலுரிக்கிறார். கோமதி என்ற பெயரை சொன்னாலும், அதை கேட்டாலும் வாயும் காதும் இனிக்கும் என்ற கருத்துடைய பாடல் அம்மன் முன் பாட வேண்டியதாகும். சொன்னாலும் வாயினிக்கும் சொலக் கேட்டால் காதினிக்கும்
பேசும் தெய்வம்: மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவாவடுதுறை ஆதினத்தின் 10 வது குரு வேலப்பதேசிகர். ஒரு முறை சங்கரன்கோவிலுக்கு வந்தார். மக்களுக்கு ஏற்படும் உடல்பிணி, மனப்பிணிகளை நீக்கும் பொருட்டு அம்மன் சன்னதியில் ஒரு எந்திரத்தை பிரதிஷ்டை செய்தார். மன்னர் புலித்தேவர் தனக்கு ஏற்பட்ட வயிற்று வலி நீங்க, வேலப்ப தேசிகரை சரணடைந்தார். மன்னரின் வயிற்றுவலியை குணப்படுத்தியதோடு அவருடைய வாழ்வில் பல அதிசயங்களை நிகழ்த்தினார். இவர் சிவபதம் அடைந்த புரட்டாசி மூல நட்சத்திரம் அன்று குருபூஜை சிறப்பாக நடக்கிறது.சங்கரன்கோவிலில் உள்ள மேலரத வீதியில் இவருக்கு சன்னதி உள்ளது. இன்றும் மக்களின் பேசும்தெய்வமாக திகழ்கிறார்.
பெரிய மருத்துவர் இவளே: * நுாறு ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்க முடியாத நோய் இருப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து 48 நாட்கள் வயனம் காப்பர். (வயனம் என்றால் அக்கோயிலில் தங்கி இருந்து அங்கு கிடைக்கும் பிரசாதம், தீர்த்தங்களை சாப்பிடுதல்) அவ்வாறு இருப்பவர்களுக்கு நோய் குணமாகும். மருத்துவர்கள் போற்றும் தெய்வமாக கோமதியம்மன் இருக்கிறாள்.
* கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் அங்கு கிடைக்கும் புற்றுமண்ணை உடம்பில் பூசிக்கொண்டு கோமதி என்னும் பெயரை 108 தடவை சொன்னால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
நாகதோஷமா கவலையை விடுங்க: நாகதோஷத்தால் சிரமப்படுபவர்களுக்கு பரிகாரத்தலமாக விளங்குவது சங்கரன்கோவில். ஒருமுறை சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்ற சந்தேகம் நாக அரசர்களுக்கு ஏற்பட்டது. தேவகுருவாகிய வியாழபகவான் இத்தலத்திற்கு (புன்னைவனம்) செல்லுங்கள் என அவர்களிடம் சொன்னார். அதன்படி இங்கு சுனை (தெப்பம்) ஒன்றை ஏற்படுத்தி சங்கரலிங்கத்தை பூஜித்து வந்தனர் நாகஅரசர்கள். ஒருநாள் சங்கரநாராயணர் வடிவத்தை அவர்களுக்கு காட்டினார். நாக தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து சிவபெருமானை வழிபட அத்தோஷம் நீங்கும்.