பதிவு செய்த நாள்
01
ஆக
2023
01:08
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்12 நாட்கள் களபபூஜை நேற்று காலை துவங்கியது. இதையொட்டி, காலை 10 மணிக்கு தங்க குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக்கற்பூரம், அக்கி, இக்கி, புனுகு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாத்தூர் மட தந்திரி சங்கரநாராயணரு பூஜையை நடத்தினார். பின்னர் அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் நடந்தது.
அதன் பிறகு மேள தாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க களபம் நிரப்பப்பட்ட தங்க குடத்தை கோவில் மேல்சாந்தி ஊர்வலமாக எடுத்து வந்து கருவறைக்குள் சென்றார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு வைரகிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 11.-30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திருவாவடுதுறை ஆதினம் அம்பலமான தேசிக பரமாச்சாரியசுவாமிகள், திருவாடுதுறை ஆதின நெல்லை மண்டல மேலாளர் ராமச்சந்திரன், சுசீந்திரம் கிளை மட பொறுப்பாளர் நாதன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபாராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், குமரி மாவட்ட கோவில்களில் இணைஆணையர் ரத்தினவேல் பாண்டியன், கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.