மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோவிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் வீர அழகர் பூப்பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோவிலில் வருடம் தோறும் தொடர்ந்து 10 நாட்கள் ஆடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டிற்க்கான திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின் போது வீர அழகர் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளிய பின்னர் வீதிவுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 29ம் தேதி இரவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வீர அழகர் மானாமதுரை சுந்தரபுரம் கடைவீதி வியாபாரிகள் சங்க மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.அங்கே வீர அழகருக்கு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்ற பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு பூப்பல்லக்கில் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் வீர அழகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். நாளை 2ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும்,4ம் தேதி உற்சவ சாந்தியுடன் பிரம்மோற்ஸவ திருவிழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், அர்ச்சகர் முத்துசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.