கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கோம்பைப்பட்டி நாகம்மாள், கருப்பணசாமி கோவில் திருவிழாவில் கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி கடந்த ஜூலை 22 சாமி சாட்டுதலைத் தொடர்ந்து கோம்பைபட்டி நாகம்மாள் கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து தினமும் நாகம்மாள் மற்றும் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முளைப்பாரி, நகைப்பெட்டி மேளதாளம் அதிர்வேட்டுகள் முழங்க அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு கரகம் ஜோடித்து நாகம்மாள் பூ கரக அலங்காரத்தில் எழுந்தருள பக்தர்கள் ஆரவாரத்துடன் கோவில் வந்தடைந்தது. தொடர்ந்து நேற்று பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். இன்று மாலை மஞ்சள் நீராட்டுடன் முளைப்பாரி மற்றும் அம்மன் கரகம் பூஞ்சோலை செல்லுதல் உடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அய்யாபட்டி, கோம்பைப்பட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.