சாஸ்தா கோயில் இரவு வழிபாட்டிற்கு வனத்துறை அனுமதி மறுப்பு --பக்தர்கள் காத்திருப்பு போராட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2023 08:08
ராஜபாளையம்: ராஜபாளையம் அடுத்த தேவதானம் சாஸ்தா கோயில் வனப்பகுதியில் இரவு வழிபாட்டிற்கு வனத்துறை அனுமதி மறுத்ததால் பக்தர்கள் 300 க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு தொடர்ச்சி மலை தேவதானம் வனப்பகுதியில் சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் இக்கோயிலை குலதெய்வமாக வழிபடுவது வழக்கம். சத்திரப்பட்டி, வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, ராஜபாளையம் உள்ளிட்ட ஏழு கிராமங்களில் வசிக்கும் ஒரு சமுதங சேர்ந்தவர்கள் ஆண்டு தோறும் ஆடி மாத வெள்ளிக்கிழமை கோயிலில் தங்கி இரவு பூஜை நடத்தி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இப்பகுதிகளை கடந்த 2021ல் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால் கோயிலில் இரவு தங்குவதற்கு நேர்த்தி கடனாக ஆடு, கோழிகளை பலியிடுவதற்கும் வனத்துறை தடைவிதித்தது. கடந்த ஆண்டு வனத்துறை அனுமதித்த நிலையில் இந்த ஆண்டு அனுமதி கேட்டு ஏழூர் வீர சைவ சங்கம் சார்பில் வனத்துறைக்கு மனு அளிக்கப்பட்டது. அதில் மாலை 6 மணிக்குள் வனப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும். பலியிட்டு சமைத்தல், இரவு தங்குதல் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. சங்கத்தினர் கலெக்டரிடம் அனுமதி கோரி மனு அளித்தனர்.
இந்நிலையில் சாஸ்தா கோவில் செல்வதற்காக வாகனங்களில் வந்த 300க்கும் மேற்பட்டோரை வனத்துறையினர் தடுத்து செக் போஸ்டில் நிறுத்தி சிறு குழுக்களாக மட்டும் சென்று திரும்ப வேண்டும் என நிபந்தனை விடுத்ததால் சோதனை சாவடி முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் வனச்சரக அலுவலர் நிர்மலா, டி.எஸ்.பி., ப்ரீத்தி பேச்சு வார்த்தையில் இரவு போதையில் சிலர் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கினர். ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமையில் இரவு தங்கி வழிபட அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.