சபரிமலையில் 10ம் தேதி நிறைப்பு தரிசி பூஜை; இம்மாதம் மூன்று முறை நடைதிறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2023 05:08
சபரிமலை: நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை நடை 10ம் தேதி மாலை திறக்கிறது. நிறைப்புத்தரிசி பூஜைகளுக்கு பின்னர் அடைக்கப்படும். நடை ஆவணி மாத பூஜைகளுக்காக 16ம் தேதி மாலை மீண்டும் திறக்கப்படும்.
நாளை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் . வேறு விசேஷ பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
10ம் தேதி காலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 5:45 முதல் 6: 15 மணிக்கு இடைபட்ட முகூர்த்தத்தில் நிறைப்புத்தடி பூஜைகள் நடைபெறும். தேவசம்போர்டு வயல்களில் பயிர் செய்யப்பட்ட நெற்கதிர்கள் சிறப்பு பூஜைக்கு பின்னர் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தலையில் சுமந்து ஸ்ரீ கோயிலை வலம் வருவார். பின்னர் ஸ்ரீகோயிலுக்குள் ஐயப்பன் விக்ரகத்தின் முன்னால் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் 10ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஆவணி மாத பூஜை களுக்காக வரும் 16 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். 21 வரை பூஜைகள் நடைபெற்று அன்றிரவு 10:00மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் திருவோண பூஜைகளுக்காக இம்மாதம் 27 மாலை 5:00 மணிக்கு நடை திறந்து 31 வரை பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த நாட்களில் பக்தர்கள் ஆன்லைன் முன் வரி மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.