பதிவு செய்த நாள்
10
ஆக
2023
11:08
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில், பழங்கால தரைமட்ட கிணறு, கோவிலை ஒட்டி உள்ளது.
வராக சிற்பத்தின் மையப் பகுதியில், குறுகிய விட்டத்துடன் இந்த கிணறு உள்ளது. பல்லவர்கள் காலத்தில், கோவில் கட்டுமானம், சுவாமி அபிஷேக தீர்த்தம் ஆகிய தேவைகள் கருதி, இந்த கிணறு அமைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தொல்லியல் துறையினர், 25 ஆண்டுகளுக்கு முன், இந்த கிணற்றில் அகழாய்ந்த போது, தரைமட்டத்தின்கீழ், பாறைவெட்டு கற்களில், படிகளுடன் தொட்டி அமைப்பு உள்ளதை கண்டறிந்தனர். கடலின் நீர்மட்டத்தை பொறுத்து, கிணற்று நீர்மட்டம் அடிக்கடி மாறும். கடல் அருகில் உள்ளதால், கடல் கரையை நோக்கி பெருக்கெடுக்கும் சில மாதங்கள், மேற்பரப்பிற்கு இணையாக கிணற்றில் நீரூற்று பெருகி, மேற்பரப்பு வரை உயரும். கடல் உள்வாங்கும் காலத்தில், கிணற்றின் நீர்மட்டம், பல அடி ஆழத்திற்கு குறையும். கிணற்றுப் பகுதியிலிருந்து, 50 மீ., தொலைவில் கடல் இருந்தும், இந்த கிணற்றில் நன்னீர் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. பழங்காலத்தில், பாறை கற்களில் வட்ட வடிவ உறை செதுக்கி, நிலத்தடி நீர் உள்ள பகுதி வரை நிலத்திற்குள் இறக்கி, கிணறு அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றின் நீர்மட்டம் உயர்வது குறித்து, சுற்றுலா பயணியரிடம் வழிகாட்டிகள் விளக்குவதை கேட்டு, பயணியர் வியந்து ரசித்தனர்.