பதிவு செய்த நாள்
11
ஆக
2023
05:08
சூலூர்: ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி, கோவில்களில் திரண்ட பக்தர்கள் மனமுருக பிராத்தனை செய்தனர். ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில், ஊஞ்சல் உற்சவம், திருவிளக்கு பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்கும். இன்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால், சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சின்னியம்பாளையம் மங்களாம்பிகை அம்மன் கோவில், கொண்டத்து காளியம்மன், அரசூர் மாரியம்மன், ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன், கணியூர் மாகாளியம்மன், முத்துக்கவுண்டன் புதூர் மாகாளியம்மன் கோவில், பள்ளபாளையம் காமாட்சியம்மன் கோவில், இருகூர் மாசாணியம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை மனமுருக வேண்டினர். இன்று காய்கனி அலங்காரத்தில் அம்மனை தரிசிக்க ஆண்டு முழுதும் உணவுப் பஞ்சம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.