பதிவு செய்த நாள்
11
ஆக
2023
05:08
சென்னை; பஞ்சவடீ ஷேத்திரத்தில் பவித்ர – சேர்த்தி ஸேவை மஹோத்ஸவ விழாவுக்கு, வரும், 13ல் திருவாவடுதுறை ஆதீனம் வருகிறார். இதுகுறித்து தலைவர், நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் வெளியிட்ட அறிக்கை:
‘மத்திய திருப்பதி’ என அழைக்கப்படும் பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதியில் கடந்த, 9ல் தொடங்கி, வரும், 13 வரை பவித்ர உற்சவம், சேர்த்தி மஹோத்ஸவ தரிசனம் நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் பூர்வாங்க பூஜை தொடங்கி, பகவத் ப்ரார்த்தனை அனுக்ஞை, யஜமான ஸங்கல்பம், புண்யாஹவாசனம், ம்ருத்க்ரஹணம், அங்குரார்பணம், வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று காலை, புண்யாஹவாசனம், கும்பஸ்தாபனம், அக்னிமதனம், பவித்ரமாலைகள் பிரதிஷ்டை, ப்ரதான ஹோமம், மஹா சாந்தி ஹோமம், பூர்ணாஹூதி, பவித்ரமாலைகள் சாற்றுதல், திருவாராதனம், சாற்றுமுறை நடந்தது. இன்றும், நாளையும் காலை, 7:00 மணிக்கு புண்யாஹவாசனம், நித்ய ஹோமம், ப்ரதான ஹோமம், மஹாசாந்தி ஹோமம், பூர்ணாஹூதி, திருவாராதனம், சாற்றுமுறையும், அதேபோல் மாலை, 5:30 மணிக்கும் நடக்கிறது. தொடர்ந்து வரும், 13 காலை, 7:00 மணி முதல், புண்யாஹவாசனம், நித்ய ஹோமம், ப்ரதான ஹோமம், பூர்ணாஹூதி, ஸ்ரீசக்கரத்தாழ்வார் திருமஞ்ஜனம், தீர்த்தவாரி, யாத்ரா தானம், கடம் ஆலயத்தை வலமாக வந்தபின், பவித்ர மாலைகள் களைதல், விசேஷ திருவாராதனம், சாற்றுமுறை, ப்ரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். விசேஷ நிகழ்ச்சியாக வலம்புரி மஹா கணபதி, ஸீதா சமேத பட்டாபிஷேக ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீதேவி, ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் போன்ற உற்சவ மூர்த்திகள், பஞ்சமுக ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி சன்னதியில் பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியுடனான விசேஷ அலங்காரத்துடன் சேர்த்தி ஸேவை மஹோத்ஸவம் நடக்க உள்ளது. அன்று காலை, 8:00 மணிக்கு திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதினம், 24ம் பட்டம் குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய ஸ்வாமிகள் முன்னிலையில் பவித்ர மாலைகள் களையப்பட்டு சொர்ண ஜடாரி, ஸ்ரீசக்ரத்தாழ்வார் விசேஷ திருமஞ்சனம், தீர்த்தவாரி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜயமாருதி சேவா ட்ரஸ்ட் செய்துள்ளது.