பராமரிப்பின்றி அழியும் நிலையில் பழமையான ஈஸ்வரன் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2023 04:08
கூடலுார்; கூடலுாரில் 17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ஈஸ்வரன் கோயிலை முழுமையாக அழிவதற்குள் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலுார் தாமரைக்குளம் ரோட்டில் மிகவும் பழமை வாய்ந்த 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலை பூஞ்சாறு அரச வம்சத்தை சேர்ந்த பூஞ்சாறு தம்பிரான் கட்டியதாக வரலாறு. இக் கோயிலுக்கு அருகில் தெப்பக்குளமும், கோயிலுக்கு சொந்தமான நிலமும் உள்ளது. போர் நடந்த போது தம்பிரான் குடும்பத்தினர்கள் இப்பகுதியில் இருந்து வெளியேறி சென்றபின் கோயிலையும் நிலத்தையும் அங்கு பூஜை செய்த சாமி என்பவரின் குடும்பத்தினர், பரம்பரையாக கவனித்து வந்துள்ளனர். ஆனால் இக்கோயில் தொடர்ந்து பராமரிக்கப்படாததால் கோபுரம், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள், கட்டடங்கள் அனைத்தும் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. தமிழர்களின் கலைத்திறனை பிரதிபலிக்கும் சிற்பங்களுடன் கோயில் கோபுரம் அமைந்துள்ளது. இக்கோயிலை சீரமைத்து முறையாக பூஜை செய்து வந்தால் கூடலுார் மக்கள் செழிப்பாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் இதனை சீரமைக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இடியும் நிலையில் இருந்த போதிலும் பக்தர்கள் வாரந்தோறும் கோயில் வளாகத்தில் பாராயணம் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் பூஞ்சாறு அரச வம்சத்தைச் சேர்ந்த வாரிசு ஸ்ரீஜித் தலைமையில் ஜோதிட பிரசன்ன நிகழ்ச்சியும் நடந்தது. இக்கோயில் முழுமையாக அழிவதற்குள் சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.